பாரதியார் பல்கலை தேர்வில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

அண்மையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வுகளில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டு தங்கப் பதக்கங்களையும் பல்கலைக்கழக அளவிலான 18 சிறப்பிடங்களையும் பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக 6 செமஸ்டர்களிலும் முயன்று சாதனை படைத்துள்ள மாணவிகளை எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

கல்லூரி முதல்வர் சித்ரா கூறும்போது, முதல் ஆண்டிலிருந்தே படிப்பில் ஈடுபாடு கொண்டிருந்ததோடு இடையில் ஒன்றரை ஆண்டுகள் பெருந்தொற்றுக்கால நெருக்கடிகளிலும் கவனம் சிதறாமல் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற்றிருக்கும் மாணவச் செல்வங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்.

கல்லூரியின் பயோகெமிஸ்ட்ரி துறை மாணவியர் பல்கலைக்கழக அளவில் 11 சிறப்பிடங்களைப் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பிஎஸ்சி பயோகெமிஸ்ட்ரி மாணவி கீர்த்தனா முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மாணவி கிருத்திகா, மிருத்திகா, கார்த்திகா, ஹரிஷா, விஜயமாலா ஆகியோர் முறையே இரண்டு முதல் ஆறாமிடத்தில் தேர்ச்சி பெற்றுப் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். குணராஜா ஜெயஸ்ரீ மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து ஏழாமிடம் பெற்றுள்ளனர். அக்ஷயாஸ்ரீ, ஜெனிஃபர், மிருதுளா ஆகியோர் எட்டாமிடம் முதல் பத்தாமிடம் வரை பாரதியார் பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றுள்ளனர்.

பிபிஏ பிபிஎம் மாணவி ஷம்னா பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மாணவி எம். அஃப்னா, பிகாம் பிஏ மாணவி தேவவர்ஷினி ஆகியோர் இரண்டாமிடம், பிபிஏ பிபிஎம் மாணவி கீர்த்தனா மூன்றாமிடம் பெற்றுள்ளனர். மேலும் பிஎஸ்சி மைக்ரோபயாலஜி மாணவி அர்பிதா உன்னிகிருஷ்ணன் ஐந்தாமிடமும், எம்காம் சிஏ மாணவி ஸ்வாதி மற்றும் பிஎஸ்சி கணிதவியல் மாணவி திவ்யதர்ஷினி இருவரும் பல்கலைக்கழக அளவில் ஆறாவது இடமும் பெற்றுள்ளனர்.