மீண்டும் தலை தூக்கும் கொரோனா!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெரும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இரண்டு அலைகள் முடிந்து இது மூன்றாம் அலை என்று கூறுகிறார்கள். இதில் கூடுதலாக ஒமைக்ரான் என்ற புதிய அவதாரமும் இணைந்து வந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தப் பெருந்தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு பத்து லட்சத்தை தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்தை எட்டியுள்ளது. இது உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக மாறியுள்ளது. 2019 தொடங்கி 2022 தொடக்கம் வரை கொரோனாவின் தொடர் தாக்குதலை சமாளிக்கிறோமே தவிர, அதை ஒழித்து விட்டோம் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.

இப்போது இந்தியாவிலும் அதுதான் நிலை. வழக்கம் போல டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரை ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆட்சிக்கு வந்தது. வரும்போதே இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை என்று நாடே தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நேரம். எப்படியோ திறமையாக சமாளித்து மீண்டு வரும் நேரத்தில் மீண்டும் சோதனையாக இந்தப் பெருந்தொற்று ஒமைக்ரான் என்னும் வடிவத்தில் வந்திருக்கிறது.

முதல் கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழுவதும் பொது முடக்கம், வாரக் கடைசி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு என்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இவை போதுமா என்ற கேள்விதான் எழுகிறது. ஏனென்றால் இந்த முறை பெருந்தொற்று பரவல் வேகம் அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

2021ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு, மழை வெள்ளம், சிறு குறு தொழில்கள் பாதிப்பு என்று தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதில் மறுபடியும் சில மாதம் பொது முடக்கம் என்பது மக்களின் வாழ்வாதாரங்களை மிகக் கடுமையாக பாதித்து விடும்.

கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம், மாணவர்கள் கல்வி என்று கடுமையாக பாதிக்கப்படுவர். எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாகவே 2021ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு, மழை வெள்ளம், சிறு குறு தொழில்கள் பாதிப்பு என்று தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி தான் இருக்கிறது. இதில் மறுபடியும் சில மாதம் பொது முடக்கம் என்பது மக்களின் வாழ்வாதாரங்களை மிகக் கடுமையாக பாதித்து விடும்.

பொதுவாகவே பொது முடக்கம் ஆகியவற்றால் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கவும், தடுக்கவும் முடிவதில்லை. வேண்டுமானால் தள்ளிப் போடலாம். ஆனால் உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உள்ளூர் வல்லுநர்கள் வரை சொல்லுவது வழிமுறைகள் என்பது மக்கள் சமூக இடைவெளி, கை கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியனவாகும். ஆனால் இதை மக்கள் மதிக்கிறார்களா என்று பார்த்தால் கொஞ்சம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மையாகும். ஒருபுறம் மாஸ்க் அணியாத நிலை, எங்கு பார்த்தாலும் இடைவெளி இல்லாத கூட்டம் இன்னொருபுறம் கொரோனா, ஓமைக்ரான் என கூப்பாடு போடுவது என்று நிலைமை இருக்கிறது.

அரசாங்கம் என்பது மக்களிடையே மக்களுக்காக செயல்படுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் பேரிடர் காலங்களில் மிக அவசியம். பொது முடக்கம் என்பது எவ்வளவு கடுமையான பாதிப்புகளை நமது பொருளாதாரத்தின் மீதும், சமூக வாழ்வின் மீதும் ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த இரண்டு அலைகளில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இன்னும் மீள முடியவில்லை என்பதையும் உணரவேண்டும்.

இனி வரும் வாரங்களில் கொரோனா பெருந்தொற்று, ஓமைக்ரான் கூட்டணியின் பிடி, கடுமையாக இருக்கப் போகிறது. அதற்கேற்ப செயல்பட வேண்டியது ஒன்றே நம் முன்னால் உள்ள வழி ஆகும். குறிப்பாக விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் சாதாரண மனிதர்கள், மருத்துவர் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எதிர்கால சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்த தான் போகிறது. இதை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எவ்வளவு விரைவாக தொற்றில் இருந்து மீண்டு வருகிறோமோ அது நமக்கும் நம் சமூகத்துக்கும் மிகவும் நல்லது.

முதலில் கொரோனா பெருந்தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பது அரசின் வருமுன் காக்கும் திட்டங்களாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போதும் 15 முதல் 18 வயது உடைய இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. என்றாலும் இன்னும் சில இடங்களில் தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாம் ஊசி போடாதவர்கள் என்ற பிரிவுகள் உள்ளன. அவர்கள் உடனடியாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் அல்லது போட்டுக் கொள்ளும்படி செய்யப்படவேண்டும். கொரோனா தொற்று இவர்களைத் தான் அதிகம் தாக்கும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் நோய் பரப்புபவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம்.

எனவே தடுப்பூசி இயக்கம் வேகப்படுத்த வேண்டும். இன்னொருபுறம் வழிபாட்டுத் தலம், மால், திரையரங்குகள், திருமணம் என்று கூட்டங்கள் சேர்வது தவிர்க்கப்பட வேண்டும். இந்த எண்ணம் இயல்பாகவே மக்களிடம் உருவாக வேண்டும். மாஸ்க் போடுவது, கை கழுவுவது, சமூக இடைவெளி என்பது வேடிக்கையாக பார்க்கப்படாமல் அன்றாட நடவடிக்கையாக மாற வேண்டும்.

இதை மக்கள் மனமுவந்து செய்ய முன்வரவேண்டும். அவசியமற்ற நடமாட்டங்களை தவிர்க்க வேண்டும். இதற்கு அரசாங்கமும் காவல்துறையும் நம் முன்னால் நிற்க வேண்டிய அவசியமில்லை. உலகமெங்கும் பல ஆயிரம் பேரை பலிகொண்ட கொரோனா ஏதோ இந்த அளவில் நம்மை விட்டு இருக்கிறது. அதை புரிந்து கொண்டு கொரோனா விதிகளை கடைபிடிப்போம்.

மூன்றாம் அலையை சரியான முறையில் எதிர்கொண்டு முடிவுக்குக் கொண்டு வருவோம்!