தேசிய அளவிலான யோகா போட்டி: மயில்சாமி அண்ணாதுரையின் சகோதரர் தேர்வு

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் சகோதரர் மோகனசுந்தரம் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் சகோதரரான இவர் கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில் யோகா செய்வதில் ஆர்வமுடைய மோகனசுந்தரம், தனது பணி ஓய்விற்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபல யோகா பாட்டி நானம்மாளின் ஓசோன் யோகா மையத்தில் யோகா பாட்டியின் மகன் பாலகிருஷ்ணனிடம் யோகா பயிற்சிகள் பெற்று வந்துள்ளார்.

கடந்த ஓராண்டிற்கும் மேல் ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்ட இவர், யோகா போட்டியில் தேசிய அளவில் தேர்வாகி அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளார். கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில், மூத்தோர் பிரிவில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கான பாராட்டு விழா ஓசோன் யோகா மையத்தில் யோகா பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பேசிய மோகன சுந்தரம் கடந்த சில வருடங்களாக உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் செய்து வந்தாலும், யோகா பயிற்சி செய்ய துவங்கிய பிறகு மனம் மற்றும் உடல் சார்ந்து புத்துணர்வு பெற்று நல்ல சுறுசுறுப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது மாநில அளவில் யோகா போட்டியில் வெற்றி பெற்று, அந்தமானில் நடைபெறும் தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொள்ள தம்மை தயார் செய்வதாகவும் அவர் கூறினார்.