குடியரசு தின நிகழ்ச்சி: கே.பி.ஆர் பொறியியல் மாணவர்கள் தேர்வு

ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசுதின விழாவில் பங்கேற்பதற்காக கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை ஒட்டி ஆஸாதிகா அம்ரித் மஹோத்சவ் என்ற விழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதனையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகமும் முன்னெடுத்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசுதின விழாவில் பங்கேற்பதற்காக நடனக்குழுக்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி ஆன்லைனில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் 18 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் கொண்ட “அக்னி பிரவா” என்ற குழு கலந்துகொண்டு தேர்வு பெற்றது.

பின்னர் பெங்களூருவில் நேரடியாக நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டு இறுதியாக புதுடில்லியில் நடைபெற்ற வந்தே பாரதம் நிருத்ய உட்சவ்வின் இறுதி போட்டியில் இக்கல்லூரி வெற்றி பெற்று குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகியுள்ளது.

இதற்காக தேர்வு செய்யப்பட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்த இந்த குழுவையும், மாணவர்களுக்கு பயிற்ச்சியளித்த பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் அகிலா ஆகியோரை கல்லூரியின் நிறுவனரும் கே.பி.ஆர் குழுமங்களின் தலைவருமான கே.பி.ராமசாமி பாராட்டினார்.