மீண்டும் மஞ்சப்பை!

தமிழக அரசு “மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை வழக்கம்போல் தொடங்கப்படும் அரசு திட்டமாக இல்லாமல் மக்கள் இயக்கமாக மாற்றுவதில்தான் இதன் வெற்றி இருக்கிறது.

பிளாஸ்டிக் கேரிபேக் பைகளின் தீமைகள் பற்றிப் பிரசாரம் செய்வது விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், செயலளவில் அதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தான் சரியான எடுத்துக்காட்டு ஆகும். இதனை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துவது என்பதே சூழலை மீட்டெடுப்பதற்கு உதவியாக அமையும்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஒரு பெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள்

தொடங்கி, தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என்று எல்லா இடங்களிலும் மஞ்சப்பை எனும் துணிப்பை உபயோகத்தை ஊக்குவிக்க வேண்டும்.

துணிப்பை பயன்படுத்தாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒன்று பிளாஸ்டிக் பை எங்கும் எளிதில் கிடைக்கின்றது. கூடவே கடைக்காரர்கள் பொருள் வாங்கும்போது இலவசமாக தருகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். கடைக்காரர்கள் தங்கள் விற்பனையை பெருக்குவதற்காக சுற்றுச்சூழலைக் கெடுப்பதற்கு துணை போகக்கூடாது. வணிக நிறுவனங்கள், அமைப்புகள், வணிகர்கள் இதனைப் புரிந்துகொண்டு துணிப்பையை வழங்க வேண்டும். அதற்கான பணத்தை தேவையான அளவு சேர்த்து வாங்கலாம். நான்கு முறை இப்படி செய்தால் அடுத்த முறை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்களே மஞ்சப்பையை கொண்டு வந்து விடுவார்கள்.

மக்கள் துணிப்பை பயன்படுத்தாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒன்று பிளாஸ்டிக் பை எங்கும் எளிதில் கிடைக்கின்றது. கூடவே கடைக்காரர்கள் பொருள் வாங்கும்போது இலவசமாக தருகிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.

இதுபோக சமூக சேவை நிறுவனங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட சமூக சேவை சங்கங்கள் இந்த செய்தியை தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் துணிப்பை இலவசமாக வழங்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மஞ்சப்பை அனைவரும் பயன்படுத்தும் வகையில் விலை குறைவானதாக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.  மகளிர் சுய உதவிக்குழு மூலம் குறைந்த விலையில் இவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், மக்களும் பயன்பெறுவார்கள்.

மஞ்சப்பை என்பது கேவலம் அல்ல; பிளாஸ்டிக் பை தான் சுற்றுச்சூழலுக்கு எதிரானது, மக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிப்பது என்பதை அனைவரும் உணர வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படும் பொழுது  அவை பல நூறு ஆண்டுகள் அழியாமல் இருந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவை சாக்கடைகளில் அடைத்துக் கொண்டு ஏற்படுத்தும் கொசுத்தொல்லை தொடங்கி, சென்னை போன்ற இடங்களில் மழை வெள்ள நீர் வடியாமல் தடுப்பது வரை பிளாஸ்டிக் கேரி பேக் உருவாக்கும் சிக்கல்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஏதோ போனால் போகிறது என்று பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மனமார மண் காக்கும் நோக்கம் கொண்டு, துணிப்பை பயன்படுத்த வேண்டும். கூடவே தேவையற்ற பிளாஸ்டிக்-பை உற்பத்தியை அதன் உற்பத்தி இடத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக நம்முடைய பாரம்பரிய துணிப்பைகளை நாம் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அதற்கான அடையாளம் தான் மீண்டும் மஞ்சப்பை.