நிறைவேற்றுவாரா செந்தில் பாலாஜி?

எந்த ஒரு ஊருக்கும் போக்குவரத்து வசதி என்பது மிகவும் முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். அதுவும் கோவை போன்ற தொழில் சார்ந்த பகுதிகளில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே சாலை வசதி இருக்கிறது. ஆனால் உட்கட்டமைப்பு வசதிகளில் மிக முக்கியமான இந்த சாலை வசதி என்பது கோவையைப் பொறுத்தவரை போதாது என்ற நிலையில் இருப்பதே நடைமுறை உண்மையாகும்.

கடந்த சில ஆண்டுகளாக கோவையில் திரும்பிய பக்கமெல்லாம் பாலங்கள், சாலைகள் என்று பல பணிகள் தொடங்கப்பட்டு இருந்தாலும் பெரிய அளவில் முழுமை பெற்றன என்று சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் தான் தமிழகத்தில் மாநில அரசுக்கான தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் ஆளும்கட்சி திமுகவுக்கு இங்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்வாகவில்லை. இப்பகுதி மக்களின் குறைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லக்கூடிய ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பகுதியில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி செயல் வேகம் மிக்கவர், துடிப்பு மிக்கவர் என்று அறியப்பட்டவர். அவர் இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். இப்பகுதியில் திமுகவை வளர்ப்பதோடு வரும் தேர்தல்களில் திமுக வெற்றி பெறச் செய்வது ஒன்று. கூடவே இப்பகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுவது என்று இரண்டு பணிகள் அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இரண்டையும் செந்தில் பாலாஜி சரியாகவே தொடங்கி செய்து வருவதாகத் தோன்றுகிறது.

கோவையில் இன்றைய ஆளும் கட்சியான திமுகவின் முகமாக செந்தில் பாலாஜி அறியப்படுகிறார். ஏற்கனவே மாவட்டம் முழுவதும் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தி பல ஆயிரம் மனுக்களைப் பெற்று அதில் சில ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறார். அதன் மூலம் மாவட்டம் முழுவதும் நல்ல அறிமுகமும், நம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. தொழில் முதலீட்டாளர் மாநாடு, விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் கோவை வருகை, தொழில்துறை வளர்ச்சி பணிகள் என்று அவர் மூலம் பலவும் நடந்தேறி வருகின்றன.

என்றாலும் சாலை வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளில் கோவை பின்தங்கியே உள்ளது என்றே கூறவேண்டும். கோவையில் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. பல இடங்களில் பாலம் மற்ற கட்டுமானப் பணிகள் நாட்கணக்கில், வாரக்கணக்கில் இழுத்துக் கொண்டே போகின்றன. மேட்டுப்பாளையம் சாலை மேம்பாலம் கட்டத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிறது. பல ஆண்டுகளாக பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. திருச்சி சாலையில் ஓரளவுக்கு பணி நடந்து இருந்தாலும் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவினாசி சாலை முழுவதும் தூண்களாக நின்று கொண்டிருக்கின்றன. கோவைக்கு பல தேவைகள் இருந்தாலும் சாலை வசதி என்பது மிக முக்கியமான, அவசியமான தேவையாகும். கூடவே உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள சூழலில் இதில் கவனம் செலுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் மதிப்பை உயர்த்தி, மக்களுடைய நம்பிக்கையைப் பெற உதவும்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த பொழுது தமிழக முதல்வராகப் பதவியேற்ற உடன் ஸ்டாலின் தெளிவாக அறிவித்து விட்டார். இங்கே திமுகவுக்கு வாக்களிக்காத மக்களும், அடுத்த முறை வாக்களிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி இப்பகுதிக்கு பல செயல்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ. 200 கோடி ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவைக்கு பல தேவைகள் இருந்தாலும் சாலை வசதி என்பது மிக முக்கியமான, அவசியமான தேவையாகும். கூடவே உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள சூழலில் இதில் கவனம் செலுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் மதிப்பை உயர்த்தி, மக்களுடைய நம்பிக்கையை பெற உதவும்.

செந்தில் பாலாஜி இந்தப் பகுதிக்கு அடிக்கடி வருகை தரும் அமைச்சராக இருந்து வருகிறார். அதுவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த பெருமழையில் கோவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. உடனடியாக வருகை தந்து, நடவடிக்கை எடுத்தது மக்களின் பாராட்டைப் பெற்றது. அதுபோக அரசு தலைமை மருத்துவமனை பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானி பள்ளி ரயில் பாலம், வடகோவை மேம்பாலம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில், நீண்ட கால நோக்கில் நிரந்தரத் தீர்வு காணும் திட்டமும் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

கோவை மாவட்டப் பகுதிகளில் பல இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பயணம் செய்வோரின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் தான் சாலைகள் தற்போது அமைந்துள்ளன. பல்வேறு கட்டுமானப் பணிகள் முடியாமல் பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டே போகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து 37 கிலோ மீட்டர் தூரம் என்றால், அங்கிருந்து முதல் 25 கிலோ மீட்டர் வெகு வேகமாக கடந்து வந்து விடலாம். கடைசி பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதுவும் சுற்றுப் பாதைகள் வழியாக வந்து சேர்வதற்குள் மக்கள் படாதபாடு படுகிறார்கள். இதற்கு இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளின் தாமதம் தான் ஒரே காரணம்.

மக்களுக்கு நேரடியாக என்ன நடைமுறை சிக்கல் என்பது தெரியாது. அதனால் தான் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை அணுகுகிறார்கள். தற்போதைய முதலமைச்சர் நல்ல முறையில் ஆட்சி செய்வதாக பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி என்ற செயல்வேகம் அமைச்சர் பொறுப்பில் இருப்பதாக அனைவரும் எண்ணுகிறார்கள். எனவே அதனை நடைமுறையில் செய்து காட்ட வேண்டியது அவரின் கடமையாகும்.

பொதுவாக தீராத சிக்கல்கள் எல்லாம் தீர்வதற்கு, பழனிக்கு பாதயாத்திரை போவதும், திருப்பதிக்கு தீர்த்த யாத்திரை போகும் பழக்கமும் உண்டு. பழனியும், திருப்பதியும், செந்தில் பாலாஜி வடிவில் கோவையைத் தேடி வந்திருக்கிறது. சாலைகள் சீர் பெறும், சாதிப்பார் செந்தில் பாலாஜி என்று அனைவரும் நம்புகிறார்கள். சாதித்துக் காட்டுவார் செந்தில் பாலாஜி என்று நாமும் நம்புவோம்!