அமைச்சரவையில் உதயமாவாரா உதயநிதி?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில், அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்குமா, இல்லையா என்ற விவாதம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

1972 ஆம் ஆண்டில் எம்ஜிஆர், திமுகவை விட்டு விலகி அதிமுகவை உருவாக்கியப் பின்னர் மிஞ்சிய திமுக மு.கருணாநிதியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதன் பிறகு திமுக ஆட்சி இல்லாமல் இருந்த காலகட்டத்தில் கூட ஸ்டாலினை உருவாக்கும் வேலையை கருணாநிதி செய்துவந்தார். 1975 ஆம் ஆண்டிலேயே மிசா போராட்டத்தில் சிறை சென்றார் ஸ்டாலின். இதன் பிறகு தீவிர அரசியலில் ஸ்டாலினை, கருணாநிதி களம் இறக்கினார்.

அதன் முதல்படியாக, 1982 இல் ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி. இதே காலகட்டத்தில், ஸ்டாலினுக்கு கட்சியில் சக போட்டியாளர்கள் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம், அந்த காலகட்டத்தில் பல்முனை திறமைமிக்க டி.ராஜேந்தர், திமுகவில் கருணாநிதிக்கு அடுத்தப்படியாக தொண்டர்களால் விரும்பப்படும் முக்கிய நிர்வாகியாக இருந்தார். என்னில் பாதி என் தம்பி என கருணாநிதியின் வாயாலேயே டி.ராஜேந்தர் புகழாரம் சூட்டப்பட்டார்.

1984 இல் பொதுத்தேர்தலுக்கு முன்பு நடந்த மயிலாடுதுறை பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்ற போது திமுக வேட்பாளராக சத்தியசீலன் களம் இறக்கப்பட்டார். அதிமுக சார்பில் தம்பிபால வேலாயுதம் களம் இறக்கப்பட்டார். அப்போது மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் பேசும்போது, இது எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான போட்டி, இதில் எம்ஜிஆரை தோற்கடிப்பேன் எனப் பேசினார். அவரது வாக்கு பலித்தது போலவே திமுக வேட்பாளர் சத்தியசீலன் வெற்றிபெற்றது எம்ஜிஆருக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்த காலகட்டத்தில் ஸ்டாலினும் தீவிர அரசியல் களத்தில் தான் இருந்தார். அக்கால கட்டத்தில் டி.ராஜேந்தரக்கு எதிராக ஸ்டாலினை, வைகோ ஆதரித்துக் கொண்டிருந்தார்.

1984 பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஸ்டாலின், மீண்டும் அதே தொகுதியில் 1989 இல் வெற்றிபெற்றார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்தப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே டி.ராஜேந்தர் திமுகவில் இருந்து விலகிவிட்டார். அதேநேரத்தில், ஸ்டாலினை தீவிரமாக ஆதரித்து வந்த வைகோ, ஈழப்பயணம் மேற்கொண்டார்.

அதன் பிறகு கட்சித் தொண்டர்களுக்கு வைகோ மீதான அபிமானம் உயர்ந்தது. அவருக்கென மாநிலம் முழுவதும் வெறிப்பிடித்த தொண்டர்கள் திரளத் தொடங்கினர். அப்போது கருணாநிதியின் வாரிசு வைகோ தான் என்ற பேச்சும் அரசியல் அரங்கில் உலா வந்தது.

இதற்கிடையே, 1991 பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. ஸ்டாலினும் ஆயிரம்விளக்குத் தொகுதியில் தோல்வி அடைந்தார். இதன் பிறகு 1993 இல் கருணாநிதியை கொல்ல வைகோ சதி செய்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி கொளுத்திபோட்டதில் வைகோ திமுகவில் இருந்தே வெளியேற்றப்படும் சூழல் உருவானது. அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலினுக்கும், வைகோவுக்கும் இடையே இருந்த அரசியல் போட்டி. ஒரு கட்டத்தில் கருணாநிதி, வைகோ இடையிலான போட்டியாக மாறியது. அதன் காரணமாகவே திமுகவில் இருந்து வைகோவை வெளியேற்றினார் கருணாநிதி.

வைகோவுடன் 13 மாவட்டச் செயலர்கள், எண்ணில் அடங்காத ஒன்றியச் செயலர்கள் வெளியேறினர். திமுகவே நேர்செங்குத்தாக பிளவுப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இதன் காரணம், இவர்கள் அனைவருமே, திமுக தலைவர் கருணாநிதியின் நல்லெண்ணத்தை பெறாதவர்களாகவும், அவரால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். உதாரணமாக கன்னியாக்குமரியில் இருந்து முக்கிய நிர்வாகி ரத்தினராஜ் வைகோவுடன் சென்றார். இதற்கு காரணம், ரத்தினராஜுக்கு போட்டியாக தர்மராஜ் என்பவரை கருணாநிதி உருவாக்கிக் கொண்டிருந்தார்.

இதேபோல, பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் வைகோவுடன் சென்றனர். அதன்பிறகு 1996 பேரவைத் தேர்தலில் திமுக, தமாகா கூட்டணி உருவானதாலும், ஜெயலலிதா எதிர்ப்பு ஒரே முகமாக திமுக கூட்டணியை நோக்கி திரண்டதாலும் வைகோவால் ஜொலிக்க முடியவில்லை. இதன் விளைவு திமுகவில் ஸ்டாலினுக்கு போட்டியே இல்லை என்ற சூழல் உருவானது. 1996 க்கு பிறகு ஸ்டாலினுக்கு அரசியலில் தொடர்ந்து ஏறுமுகம் உருவானது. பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, நேரடித் தேர்தலில் சென்னை மேயராக ஸ்டாலின் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை கருணாநிதி உருவாக்கி கொடுத்தார்.

1996 பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நாட்டாமை திரைப்பட விவகாரத்தில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட அரசியல் மோதலில் சரத்குமார் திமுகவில் இணைந்தார். சரத்குமாருக்கும் அரசியலில் ஏறுமுகம் கிட்டியது. அக்காலகட்டத்தில் சரத்குமாருக்கும் நல்ல பட வாய்ப்புகள் கிட்டியதால் பலமொழிகளை சரளமாக பேசக்கூடிய சரத்குமாரும், ஸ்டாலினுக்கு போட்டியாக திமுகவில் உருவாகக்கூடும் என்ற பேச்சும் எழுந்தது.

இதற்கிடையே 1998 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு சரத்குமாருக்கு கிட்டியபோது வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. கோவை குண்டுவெடிப்பு, பிரதமர் வேட்பாளரான வாஜ்பாயிக்கு ஆதரவான அலை வீசியதாலும், நுட்பமான கள அரசியலை புரிந்துகொள்ளாமல் இருந்ததாலும் சரத்குமார் தோல்வி அடைந்தார். இதன் பின்பும் சரத்குமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தது. இருப்பினும் இந்த தோல்விக்குப் பிறகு சரத்குமாருக்கு பெரிய அளவில் ஏறுமுகம் கிடைக்கவில்லை. 2003 ஆம் ஆண்டில் கட்சியில் ஸ்டாலின் துணைப் பொதுச்செயலர் பதவியை அடைந்தார்.

2006 இல் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கூறி திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் சரத்குமார் இணைந்ததால், ஸ்டாலினுக்கு இருந்த சிறு போட்டியும் நீங்கியது. அதன் பிறகு சரத்குமாரின் அரசியல் வாழ்வும் அஸ்தமனமானது. 2006 பேரவைத் தேர்தலுக்குப்பின் ஸ்டாலினும் அமைச்சர் ஆனார்.

இதன்பிறகு யாரும் எதிர்பாராத நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த தனது மூத்த மகன் மு.க.அழகிரியை அரசியலில் அறிமுகம் செய்தார். முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலையில் விடுதலையான பிறகு 2009 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக பதவியேற்றார். குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற முக்கிய களப்பணியாற்றினார்.

இதன் பிறகு நீண்ட காலத்துக்கு பிறகு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனை வெற்றிபெற செய்தார். இதற்கு பரிசாக தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அழகிரிக்கு கொடுத்து அலங்கரித்தார் கருணாநிதி. இதேவேளையில் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்து கட்சியில் அன்பழகனுக்கு அடுத்து மூன்றாவது அதிகார மையமாக மாற்றினார் கருணாநிதி. மேலும், கருணாநிதி குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசாக கனிமொழியும் அரசியல் களத்தில் இறக்கப்பட்டதால் ஸ்டாலினுக்கு, அழகிரி, கனிமொழி என இரு போட்டியாளர்கள் குடும்பத்தில் இருந்தே உருவாகினர்.

குடும்ப அரசியல் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த திமுக, 2011 இல் நடந்த பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. அந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு மாறிய ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியிடம் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தனது அரசியல் வாழ்வை நிலைநிறுத்திக் கொண்டார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திமுக விலகுவதில் அழகிரிக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. தென்மாவட்டங்கள் முழுவதும் அழகிரிக்கு என தனி ஆதரவு வளையம் உருவானது. இதன் தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்தில் கூட ஆங்காங்கே அழகிரியின் ஆதரவு வளையம் உருவாக தொடங்கியது. குறிப்பாக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், முன்னாள் இணை அமைச்சர் நெப்போலியன், முன்னாள் ராமநாதபுரம் எம்பி. ஜே.கே.ரித்தீஷ் போன்ற ஆதரவாளர்கள் அழகிரிக்கு உருவாகினர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் 15 சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதன்படி, தமிழகத்தில் 234 பேரவை உறுப்பினர்களில் 34 பேர் மட்டுமே அமைச்சர்களாக முடியும். ஏற்கெனவே 34 அமைச்சர்கள் பதவியில் இருப்பதால் உதயநிதியை அமைச்சர் ஆக்குவதிலும் சிக்கல் உள்ளது.

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போட்டி ஒரு கட்டத்தில் கருணாநிதி, அழகிரி போட்டியாக மாறவே அழகிரியை கட்சியில் ஓரங்கட்டும் பணியைத் தொடங்கினார் கருணாநிதி. மதுரை மாநகர திமுக அமைப்பை கலைப்பது என்ற போர்வையில் அழகிரி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதன் தொடர்ச்சியாக அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் கட்சியில் ஸ்டாலின் கை ஓங்கியது.

தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலை பொறுப்பேற்று நடத்தி, ஸ்டாலின் தோல்வி அடைந்தாலும், 2016 பேரவைத் தேர்தலில் திமுக வலுவான எதிர்கட்சியாக வரும் வாய்ப்பை உருவாக்கினார். இதனால் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் திமுக முழுமையாக வந்தது.

இதற்கிடையே கருணாநிதி தீவிரமாக செயல்படாமல் இருந்த காலகட்டத்தில் கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகனின் ஆசியுடன் கட்சியில் செயல் தலைவராகவும், கருணாநிதி மறைவுக்குப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ஸ்டாலின். கட்சியில் ஒற்றைத் தலைமையாக நிமிர்ந்த ஸ்டாலின், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தனது திறமையை நிரூபித்தார். தொடர்ந்து 2021 பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்று திமுகவிலும், தமிழக அரசியலிலும் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார் ஸ்டாலின்.

இதற்கிடையே 2018 ஆம் ஆண்டில் நடந்த காவிரி பிரச்சனை போராட்டத்தில் அரசியல் களத்துக்கு வந்த உதயநிதி, 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக அனைத்து தொகுதிகளிலும் வலம் வந்தார். குறிப்பாக அன்புமணி ராமதாஸ், பிரதமர் மோடி, அப்போதைய முத்லவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பிரசாரம் மேற்கொண்டார்.

திமுக மாபெரும் வெற்றி அடைந்த பிறகு கட்சியின் இளைஞரணி செயலராக உதயநிதி பொறுப்பேற்றார். தொடர்ந்து 2021 பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவில்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெரிய வெற்றியை பெற்றார். இருப்பினும் அமைச்சரவையில் உதயநிதிக்கு, இடம் அளிக்கப்படவில்லை.

ஆனால், கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக கட்சி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலினுக்கும் மரியாதை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் ஸ்டாலின் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. காரணம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் 15 சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதன்படி, தமிழகத்தில் 234 பேரவை உறுப்பினர்களில் 34 பேர் மட்டுமே அமைச்சர்களாக முடியும். ஏற்கெனவே 34 அமைச்சர்கள் பதவியில் இருப்பதால் உதயநிதியை அமைச்சர் ஆக்குவதிலும் சிக்கல் உள்ளது.

திமுகவுக்குள் ஸ்டாலின் நிலை பெற்றதைவிட, மிக மிக எளிதாக உதயநிதி ஸ்டாலின் நிலைபெற்று வருகிறார். இதற்கு காரணம், கருணாநிதி காலத்தில் அனைத்து மாவட்டச் செயலர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஸ்டாலின் காலத்தில் ஜெயலலிதா போல தலைமையின் அதிகாரம் அதிகரித்துள்ளதால், உதயநிதிக்கான வளர்ச்சி எளிதாக உள்ளது. அதேவேளை ஸ்டாலினுக்கு டி.ராஜேந்தர், வைகோ, சரத்குமார், மு.க.அழகிரி, கடைசி காலகட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் என போட்டி இருந்தது போல உதயநிதிக்கு போட்டியே இல்லை என்ற நிலை தான் உள்ளது.

அதேபோல எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு துருவ அரசியல் இருந்தது போல இப்போது ஸ்டாலினுக்கு இணையான ஒற்றைத் தலைமை இல்லாத காரணத்தால் கருணாநிதி தயங்கி, தயங்கி செய்ததை ஸ்டாலின் தயக்கமே இல்லாமல் செய்ய முடியும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்ற குரல்களுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் ஸ்டாலின் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உதயநிதியின் அரசியல் வாழ்வு

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, வாரிசுகளை தலைவர்கள் அரசியலில் அறிமுகப்படுத்தினாலும் ஜனநாயகத்தில் மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே யாரும் தலைவர்களாக மிளிர முடியும். ராகுல் காந்தியை என்னதான் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டாலும் மக்கள் அபிமானத்தை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.

தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் தலைமையின் பிடிக்குள் இருக்கும்போது எந்த வாரிசையும் எளிதாக முன்னிறுத்த முடியும். உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை அவருக்கு கட்சிக்குள் போட்டியே இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் எவ்வாறாக செயல்படுகிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதைப் பொறுத்தே அவரின் அரசியல் வாழ்வும் உள்ளது. சேப்பாக்கத்தில் போட்டியிட்டு பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.