70 நாட்களுக்கும் மேல் சூரியன் மறையாத நாடுகள்

சூரியன் உதயமனால் வேலை, மறைந்தால் தூக்கம் என்றிருக்கும் நமக்கு, சூரியன் மறையாத இடங்கள் இருக்கிறது என்றால் நம்ப முடியுமா? ஆனால், இந்த தகவல் உண்மை தான்.

உலகின் சில இடங்களில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியனின் அஸ்தமனமே இருக்காது. படிப்பதற்கு வியப்பாக இருந்தாலும் பூமியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

நார்வே: ஆர்க்டிக்கில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் இருக்கிறது. அந்த குறுப்பிட்ட நாட்கள் முழுவதும் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கும். இங்கு மே மாதம் துவக்கம் முதல் ஜூலை மாதம் இறுதி வரை சூரியன் மறைவதில்லை. நோர்வேயின் ஸ்வால்பார்டில், ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கிறது.

நுனாவுட், கனடா : நுனாவுட் என்ற இடம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாக முழு சூரிய வெளிச்சத்தில் மட்டுமே இருக்கும். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் சூரியன் அஸ்தமனம் ஆகாமல், பகல் பொழுதாக நீடிக்கிறது. குளிர்காலத்தில் தொடர்ந்து 30 நாட்களுக்கு முழுமையாக இருளாக இருக்கிறது.


ஐஸ்லாந்து : கொசுக்கள் இல்லாத நாடாக அறியப்படும் ஐஸ்லாந்தில், ஜூன் மாதத்தில் சூரியன் மறைவதில்லை.

பாரோ, அலாஸ்கா : அலாஸ்காவில் உள்ள பாரோ இடத்திலும் சூரியன் அஸ்தமனம் இருக்காது. மே மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஜூலை இறுதி வரை சூரியனின் அஸ்தமன் இருக்காது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 முழு இருளாக இருக்கும்.

பின்லாந்து : பின்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் அஸ்தமனத்தை காண முடியாது. கோடைக்காலத்தில் மட்டும் தொடர்ச்சியாக 73 நாட்களுக்குச் சூரியன் அஸ்தமனம் இல்லமால், பகல் பொழுதாக இருக்கும். குளிர்காலத்தில் சூரிய ஒளி இருக்காது. இங்கு வசிக்கும் மக்கள் பூமியில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்களாகக் கருதப்படுகின்றனர். காரணம், தொடர்ச்சியான சூரிய பிரகாசத்தினால் கோடையில் குறைவாக உறங்குகின்றனர். அதேநேரத்தில், குளிர்காலத்தில் நிகழும் நீண்ட இரவு நேரத்தின் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் அதிகமாகத் தூங்குவதாகக் கூறப்படுகிறது.

ஸ்வீடன் : மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை நள்ளிரவில் தான் சூரியன் மறையும். அதேபோல், மறைந்த சிறிது நேரத்தில், அதாவது அதிகாலை 4 மணியளவில் நாட்டில் மீண்டும் சூரியன் உதயமாகும். வருடத்தில் 6 மாதங்கள் வரை முழு சூரிய ஒளியின் கீழ் இருக்கும்.