கோவையில் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் 

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோவையில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் மூலப் பொருட்கள் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பின் சார்பில் நாடு முழுவதும் இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான காப்பர், அலுமினியம், பேப்பர், பிளாஸ்டிக், சி.ஆர். சீட், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதனால் உற்பத்தி சார்ந்த தொழிலகங்கள் ஏற்கனவே ஆர்டர்களை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டி நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்னிறுத்தின. ஆனால், இதுவரை விலையேற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில், நாடு முழுவதிலும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைந்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் மட்டும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கொடிசியா, சீமா, டேக்ட், காட்மா, கொசிமா, கௌமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை, தலைவர், பாலசுப்பிரமணியன் கூறுகையில்:

அனைத்து மூலப்பொருட்களின் விலையும் 100 சதவீதத்திற்கு மேல் விலையேற்றம் கண்டுள்ளன. முன்பெல்லாம் வருடத்திற்கு அல்லது மாதத்திற்கு மட்டுமே விலை நிர்ணயிக்கப்படும். ஆனால் இப்போது நாள்தோறும் மூலப்பொருளின் விலை மாற்றம் அடைந்தும், ஏற்றம் அடைந்தும் வருகின்றன. இதனால் பல தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு மூலப் பொருட்களின் விலையை கண்காணிக்கும் குழுவை அமைக்க வேண்டும்.

மேலும் இந்த கடும் விலையேற்றத்தினால் பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளன. மூலப்பொருள்களின் ஏற்றுமதிக்கு தடைவிதித்து, அதை ஒரு மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உருவாக்கியே ஏற்றுமதி செய்ய வேண்டும். நேரடியாக நாட்டில் உள்ள கனிம வளங்களான மூலப் பொருளை ஏற்றுமதி செய்யும் போது அது தொழில் துறையினருக்கு பாதகமாக அமையும்.

மேலும், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப் பொருளுக்கு வரி நீக்கம் செய்ய வேண்டும். இதனால் விலையேற்றம் கட்டுக்குள் வரும். நாடு முழுவதும் சுமார் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பினரை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த விலையேற்றம் இவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் சாதாரண மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நிலை தொடர்ந்தால் பலர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் தெரிவிக்கையில்:

முக்கிய மூலப் பொருளான இரும்பு போன்றவற்றிக்கு கோட்டா சிஸ்டம் அமைத்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விலையைக் குறைத்து தர வேண்டும். நிலையான விலை நிர்ணயம் இல்லாததினால் மூலப் பொருட்கள் சந்தைக்கு வருவது குறைந்துள்ளது. இரும்பு உற்பத்தி செய்யும் பல முக்கிய நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு தான் அதிக முன்னுரிமை தருகின்றனர்.

உயர்தரமான இரும்பு வகைகள் தற்போது சந்தையில் விற்பனை ஆவதில்லை. ஆனால் மோட்டார் பம்பு உற்பத்தி செய்வதற்கு உயர்தரமான இரும்பு தேவைப்படுகிறது. தற்போது நிறுவனங்கள் இந்த உயர்தரமான இரும்பை உற்பத்தி செய்யாததினால் இதுவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனுடன் அனைத்து மூலப் பொருளுக்கும் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சீமா, தலைவர், கே.வி.கார்த்திக் பேசுகையில்:

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் இந்தியாவில் இருந்து இரும்பு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூலப் பொருளை ஒரு தயாரிப்பாக மாற்றி ஏற்றுமதி செய்யும்போது தான் நாட்டிற்கு அது பலன் தருவதாக இருக்கும். இதனால் ஏற்றுமதியில், குறிப்பாக இரும்பை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும். மேலும் மூலப்பொருளில் இரும்பு, எஃகு போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனப் பேசினார்.