கோவையில் இன்று முதல் ஹெலி கார்னிவல்

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில்  நடைபெறும் ஹெலி கார்னிவல் நிகழ்ச்சி, இன்று(10.05.2018) கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி அருகே உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டது.  இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட நீதிபதி ஜியாபுதின் கலந்து கொண்டு முதல் ஹெலிகாப்ட்டர் பயணத்தை, பயணம் செய்து துவக்கிவைத்தார். கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் செயலாளர் டாக்டர். பி. கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் செயலாளர் டாக்டர். பி. கிருஷ்ணன் கூறியதாவது “கோவையில் நடைபெறும் ஹெலி கார்னிவல் நிகழ்ச்சியில் குழந்தைகள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் பறந்து கோவையை சுற்றி வலம் வரலாம். இதில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவ மாணவியர்களுக்கு ரூ.500 கட்டண சலுகையும், 10 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியானது மே மாதம் 10-ம் தேதி முதல்  15-ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. பத்து நிமிடம் நடைபெறும் இப்பயணத்தில் கோவையை 3000 அடி உயரத்தில் இருந்து “ஏரியல் வியூவில்” கண்டு ரசிக்க முடியும். 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மருதமலை, ஈஷா, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பில், கோவை மாநகரத்தின் அழகையும் கண்டு களிக்கலாம். ஹெலிகாப்டரில் பறக்கும் போது பயணிகளின் வீட்டின் மேல் பறந்து செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும்” என்றார்.