உங்கள் எதிர்காலத்தை நீங்களே வடிவமையுங்கள்! – ஜாக் மா

நிராகரிப்பு, ஏமாற்றம், தோல்வி ஆகியவற்றை நாம் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்வில் சந்தித்திருப்போம். சில சமயங்களில் அதில் இருந்து மீண்டு வருவது சவாலான ஒன்றாக இருக்கும். இந்த பதிவில் நாம் காண போவது தொடர் நிராகரிப்பை சந்தித்த ஒருவர், ஒரு சந்தர்ப்பத்தில் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவரானதைப் பற்றியும், பணத்தை நோக்கி வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கமால் ‘இது போதும்’ என முடிவெடுத்து தான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தின் பதவியை விட்டு விலகியவருமான ஒருவரைப் பற்றி தான் காண போகிறோம்.

வேலைக்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் விண்ணப்பித்தும் அனைத்திலும் தோல்வி. பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தில் 10 முறை முயற்சித்தும் தோல்வி. அன்றைய காலகட்டத்தில் பிரபலமாகி கொண்டிருந்த கே.எஃப் .சி சீனாவில் தன் கிளையை நிறுவி ஆட்களை பணியமர்த்தி கொண்டிருந்தது. விண்ணப்பித்த 24 பேரில் 23 பேரும் தேர்வாகினர். ஜாக் மா என்ற ஒருவர் மட்டும் தேர்வாகவில்லை.

ஆங்கிலத்தில் நாட்டம் கொண்டிருந்த அவர், அதில் இன்னும் மேம்பட வேண்டும் என்று சீனாவில் சுற்றுலா வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ஒரு கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் கற்க வாய்ப்பு கிடைத்தது. பின்பு ஆங்கில பேராசிரியராக பணியாற்றய அவர் அதன் மீதிருந்த காதலால் நேசித்து தன் பணியை செய்தார்.

ஆனால் அவருக்குள் எப்போதும் அடுத்து என்ன என்ற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது. மேலும் தன்னை எந்த இடத்திலும் நிரந்தரமாக அடைத்து கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு நிராகரிப்பிலும் அவரின் கனவுகள் தாமதமானதே தவிர  முடிந்து விடவில்லை என நம்பினார்.

அமெரிக்கா செல்ல நேர்ந்தபோது அங்கு இணையதள சேவைகளின் எழுச்சியை கண்டார். ஆனால் அப்போது சீனாவில் இணையதள சேவை குறித்து பெரிதாக தெரிந்திருக்கவில்லை. எனவே சீனாவில் இணையதள நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்து CHINA PAGES என்ற நிறுவனத்தை வங்கியில் கடன் வாங்கி தொடங்கினார். ஆனால் இந்நிறுவனத்தை தொடர முடியாமல் கைவிட்டார்.

அதன்பின் அலிபாபா.காம் என்ற இணைய வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். முதல் மூன்று வருடம் நிறுவனம் நட்டத்தில் ஓடியதால் பணியாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை இருந்தது. அந்த சமயத்தில் தான் இரண்டு நிறுவனம் அவர் கம்பெனியில் முதலீடு செய்ய முன்வந்தது. Tababao.com என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தை தொடங்கினார்.

அப்போதைய சூழலில் இணையதள வியாபாரங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ebay என்ற நிறுவனம் மட்டும் கொடி கட்டி பறந்தது. அந்த சமயத்தில் தான் ஜாக் மா, தனது நிறுவனத்தின் இணைய தள சேவையில் முதல் மூன்று சேவையை இலவசமாக வழங்கினார். மெல்ல மெல்ல சீனாவின் இணைய வர்த்தகம் அவர் கட்டுக்குள் வர ஆரம்பித்தது. அமெரிக்கா பங்கு சந்தைகளில் அவரது பங்குகள் அதிக விலைக்கு சென்றது. சீனாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்.

ஆரம்பத்தில் ஜாக் மாவிற்கு அவர் நினைத்தது கிடைத்திருந்தால் அவரது வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்கும். ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்பது என்றும் முடிவாகாது என்றும், அது இன்னொன்றை தொடங்குவதற்கான ஆரம்ப புள்ளியாக கூட  இருக்கலாம் என்பதற்கு ஜாக் மாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

ஜாக் மா இளைஞர்களுக்கு கூறுவது “எதிர்காலத்தை பற்றிய பயம் வேண்டாம், ஆனால் அதை சந்திக்க தேவையான முயற்சியை எடுங்கள், உங்களின் எதிர்காலத்தை வடிவமையுங்கள்” என்பதுதான்.

“உங்களது 20 – 30 வயதில் நல்ல முதலாளியை தேர்ந்தெடுங்கள். அது மிக சிறந்த நிறுவனமாக இருக்க வேண்டும் என்றில்லை. அவரிடம் இருந்து பணியை கற்றுக் கொள்ளுங்கள். 30 – 40 வயதில் உங்களுக்காக உங்கள் வாழ்வில் செய்ய வேண்டும் என்று நினைத்த செயலை செய்யுங்கள். 40 – 50 ல் உங்களது  20 வருட அனுபவத்தை கொண்டு நீங்கள் எதில் திறன் உள்ளவர்களாக இருப்பீர்கள் என தோன்றுகிறதோ அதை தேர்ந்தெடுங்கள். 50 – 60 உங்களது நேரத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்பதில் செலவிடுங்கள்” என்கிறார்.

 

Story by: RAMYA S