ஒமிக்ரான்: அச்சம் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம்

கொரானா இரண்டாம் அலை முடிந்து மூன்றாவது அலை வருமா என்று பயம் கலந்த எதிர்பார்ப்போடு இருந்து வரும் வேளையில் புதிய ஒமிக்ரான் என்கின்ற ஒரு புதிய அலை, சும்மா அதிருதில்ல என்பது போல் வந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த ஒமிக்ரான் அதற்குள் சில நாடுகளுக்குப் பரவி, உலக நாடுகளை நடுங்க வைத்து அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உடனடியாக விமானப் போக்குவரத்தை தடை செய்துவிட்டன. இந்தியாவும் கூட சர்வதேச விமானப் போக்குவரத்தை கேன்சல் செய்து இருக்கிறது. இன்னும் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகி்ன்றனர். இந்த சூழலில் உலக சுகாதார நிறுவனம் இந்த ஒமிக்ரான் பரவலைக் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கோவிட் -19 வைரஸ் போல பல மடங்கு வேகத்தில் இது பரவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்போது தான் பரவத் தொடங்கியிருப்பதால், இதனுடைய தன்மைகள்,  இதனைக் கட்டுப்படுத்தும் விதம், பரவும் விதம் என்று எதுவும் முழுமையாகத் தெரிய வரவில்லை. இனி மேல் தான்  அறிவியலாளர்களும், மருத்துவர்களும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.  ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகள் இந்த வைரசுக்கு நிவாரணம் தருமா என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் 50 வகையான உருமாற்றங்கள் அடைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பத்து வகை நேரடியாக சுவாசப் பாதையைத் தாக்கும் என்பது மிகவும் கவலை தரக்கூடிய அம்சமாகும். ஐரோப்பா, அமெரிக்காவில் எழுந்துள்ள அதிர்ச்சி அலைகள் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 6 மாதங்களில் என்ன நடக்கும் என்று அச்சத்தோடு இதனை உலக நாடுகள் எதிர் கொள்ள உள்ளன.

இந்த ஒமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவில் 25 சதவீதம் கூட கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இன்றைய சூழலில் ஒரு நாடு பாதிக்கப்பட்டால், மற்ற நாடுகளும் உலகில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படும் என்பதுதான் நடைமுறை உண்மையாகும். அந்தவகையில் ஒவ்வொரு நாடும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவும் பல முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் நாம் முழுமையான தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதும் உண்மையாகும். இந்தியாவிலும் இந்த புது வகை வைரஸ் பரவத் தொடங்கி விட்டது.

ஒருபுறம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  இன்னொருபுறம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் என்று இரு முனைகளிலும் அரசு செயல்பட வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தமிழகம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இரண்டு கொரோனா கால கட்டத்தைத் தாண்டி இப்பொழுது மழை நீரில் சிக்கி, தவித்து, தத்தளித்து வரும் நிலை இருக்கிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் போன்ற பெரும் தொற்று தாக்கினால் என்னவாகும் என்று யோசித்து விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

தென் ஆப்பிரிக்கா, ஒமிக்ரான் என்ற வைரஸ் குறித்து தெரிவித்த உடனே உலக சுகாதார நிறுவனம் இது குறித்த பல எச்சரிக்கைகளை கொடுக்கத் தொடங்கிவிட்டது. அதன் படி, இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகள் கலந்து கொண்ட ஒரு உயர்நிலை கூட்டத்தைக் கூட்டியது. அதில் பல அறிவுரைகளையு‌ம்,  அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. முதல் நடவடிக்கையாக நமது தடுப்பூசி திட்டம் வேகமும் விரிவும் படுத்தப்பட வேண்டும். அடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சோதனைகள் கண்டிப்பாக நடத்தப்பட்டு வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக சீனா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேசில், பங்களாதேஷ்,  ஜிம்பாப்வே,  சிங்கப்பூர், மொரீசியஸ், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கட்டாய சோதனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். கொரோனா வைரஸ் உறுதியானால் தனிமைப்படுத்தப்பட்டு உடனே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மறுபடியும் இந்தியாவில் மருத்துவ வசதிக்கான நோய்த்தடுப்பு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாடு, வென்டிலேட்டர் தட்டுப்பாடு போன்றவை இல்லாமல் எல்லா விதமான மருத்துவப் படுக்கை வசதிகள் உள்ளிட்ட  உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். பெருந்தொற்றிலிருந்து தமிழகம் இன்னும் விடுதலை பெறவில்லை. அப்படி இருந்தாலும் பல மாநிலங்களில் இருந்தும் பல வெளிநாடுகளிலிருந்தும் வருவோர் மூலம் நோய்த் தொற்று இங்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பொருளாதாரம் ஒரு பக்கம் படுத்துக் கிடக்கிறது. இந்நிலையில் இருக்கின்ற சூழலைப் புரிந்து கொண்டு நாம் ஒத்துழைக்க வேண்டும். இன்னும் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 700 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சோதனைகளை அதிகரிக்கும் போது இந்த எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே இங்கு நிகழ்ந்த இரண்டு கொரோனா பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். வெளிநாட்டுப் பயணிகளை இந்த நிலையில் சரியாக சோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுத்தாலே ஓரளவு சுமை குறையும். உள்ளே வரவிட்டு அனுமதித்த பிறகு சிகிச்சை அளிப்பது குதிரை ஓடிய பிறகு  லாயத்தை பாதுகாப்பது போல தேவையற்றதாக மாறிவிடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் 19 தாக்குதலால்   பொதுமக்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தனர் என்பதை அனைவரும் அறிவோம். தூய்மைப் பணியாளர், காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை என்று முன் களப்பணியாளர் தொடங்கி,  சாதாரண மக்கள் வரை எவ்வளவு சிரமம்  அனுபவித்தனர் என்பதை மறந்து விடக்கூடாது.

மீண்டும் வள்ளுவருடைய குரள் தான் நினைவுக்கு வருகிறது,

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.