சவாலான சிறுநீரகப் பிரச்சினையை சரிசெய்த பி.எஸ்.ஜி மருத்துவர்கள்

40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு சிறுநீரகத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை சரிசெய்த நிலையிலும் மீண்டும் அடைப்பு அதிகமாகி பாதிப்பு தீவிரமாகி இருந்தது. இவருக்கு சிகிச்சை அளிப்பதில் சவாலான சிக்கல்கள் இருந்த நிலையிலும், பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டவை:

நோயின் தன்மை

டாக்டர் அறிவழகன், ஆலோசகர், நெஃப்ரலாஜிஸ்ட்

அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கூறுகையில்: முதன் முதலில் இந்த நோயாளி நமது மருத்துவமனைக்கு வரும்போது அவருக்கு சிறுநீரக செயலிழப்பு, மூச்சு வாங்குவதில் சிரமம், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் சூழல் இருந்தது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினால் சிறுநீரகம் பாதித்து இருந்தது. மேலும், சிறுநீரகத்திற்கு ரத்த ஓட்டம் குறைவாக செல்வதையும் பரிசோதனை மூலம் கண்டறிந்தோம். இதனால் ரத்தக் குழாய் சுருக்கத்தை சரிசெய்யும் வகையில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டது.

இந்த சிகிச்சையினால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் டயாலிசிஸ் தேவைப்படாமல் இருந்ததோடு அவர் நலமாகவும் இருந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம், குறைவான சிறுநீர் வெளியேற்றம் போன்ற பிரச்சினை ஏற்பட்டது.

அவருக்கு பரிசோதனை செய்ததில் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மீண்டும் சுருக்கம் ஏற்பட்டு அடைப்பு வந்திருப்பது தெரிந்தது. நம் உடம்பில் அயோர்டா என்னும் மிகப்பெரிய ரத்தக் குழாய் தான் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை அளிக்கக் கூடிய முக்கியமான ரத்தக் குழாய். அதிலும் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

 

மருத்துவக் குழுவின் ஆலோசனை 

டாக்டர் பிரேம் கிருஷ்ணா, இன்டெர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்

சிறுநீரகத்திற்கு கீழ் இருந்த அயோர்டா ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அந்த அடைப்பு இன்னும் அதிகமானது. இதனால் நோயின் தன்மை மேலும் தீவிரமானது. இந்த முறை அவருக்கு முன்பு செய்த சிகிச்சையை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருந்தன. அயோர்டா ரத்தக் குழாயை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து, செயற்கை ரத்தக் குழாய் ஒன்றை பொருத்தி மீண்டும் சிறுநீரகத்திற்கு ரத்தம் செல்லும் வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என எங்கள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து அதற்கேற்ற சிகிச்சை முறையை வழங்கினோம்.

 

சவாலான சிகிச்சை

டாக்டர் அனந்த நாராயணன், ஆலோசகர், கார்டியோ தொராசிக் சர்ஜன்

அயோர்டா ரத்தக் குழாய் தான் இதயத்தில் இருந்து, உடம்பில் உள்ள பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை செலுத்துகிறது. எங்களிடம் வந்தவருக்கு வயிற்றுக்கு கீழ் பகுதியில் இருக்கும் ரத்தக்குழாய் முழுவதுமாக அடைபட்டு விட்டது. அதனால் அவருக்கு சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தம் முழுவதுமாக நின்றுவிட்டது.

இதனால் அவருக்கு டயாலிசிஸ் மூலம் தான் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டது. மேலும், வயிற்றுப் பகுதிக்கு கீழ் இருக்கும் ரத்தக் குழாயை மாற்றி செயற்கை குழாயைப் பொருத்தினோம்.  இது போன்ற அறுவை சிகிச்சைகள் மிகவும் சவாலானது. இப்போது அவர் சிறுநீரக பாதிப்பில் இருந்து குணமடைந்து நலமாக உள்ளார்.

 தீர்வளித்த பி.எஸ்.ஜி

குணமடைந்தவர் மற்றும் அவரது மனைவி கூறுகையில்: சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரிந்த பின் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்காமல் இருந்தது. பின்னர்தான் பி.எஸ்.ஜி மருத்துவமனையை அணுகினோம். கிட்டத்தட்ட 20 டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பி.எஸ்.ஜி மருத்துவர்கள் எங்களிடம் இதற்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்கள். இப்போது  இந்த சிகிச்சைக்குப் பின்னர் எதிர்பார்த்த தீர்வு கிடைத்துள்ளது. டயாலிசிஸ் தேவைப்படாத அளவிற்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி யில் சிகிச்சை எடுத்தபோது மருத்துவர்களும், மற்ற பணியாளர்களும் நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர்.