முடிவில்லாத வாரிசு அரசியல்!

வாரிசு அரசியல் விவகாரத்தை பிரதமர் மோடி கையில் எடுத்திருப்பதன் மூலம் மீண்டும் இது குறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.

இந்தியாவின் மக்களாட்சி ஜனநாயகம் மீண்டும் மன்னராட்சி முறையை நோக்கி மெதுவாக அரசியல் கட்சிகள் நகர்த்துகின்றனவா என்னும் அளவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. “எங்கள் கட்சியில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என மேடைகளில் ஆக்ரோஷமாகப் பேசி, கட்சிகளை தொடங்கியவர்கள் எல்லாம் பிற்காலத்தில் தலைவர் நாற்காலியை மகன்களுக்கு அளித்தது தான் இந்திய அரசியலின் தொடர் கதைகள். என்னதான் புதிய சித்தாந்தங்களைப் பேசி அரசியல் கட்சிகளைத் தொடங்கினாலும், வாரிசு அரசியல் என்பதை மட்டும் பெரும்பான்மையான கட்சிகள், தங்களின் எழுதப்படாத கொள்கையாகவே வைத்திருக்கின்றன.

தேசிய அரசியலைப் பொறுத்தவரை வாரிசு அரசியலுக்கு முதலில் பிள்ளையார்சுழி போட்டது காங்கிரஸ் கட்சி தான். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, அடுத்தடுத்து சில பிரதமர்கள் வந்தபோதும், ஒரு கட்டத்தில் இந்திரா காந்தியை பிரதமராக்கி முதல் முறையாக வாரிசு அரசியலை அறிமுகம் செய்தது காங்கிரஸ். இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்த இந்திரா காந்தி திடீரென அகால மரணம் அடைந்த நிலையில்,  விமான ஓட்டியாக இருந்த ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கி மீண்டும் வாரிசு அரசியலை உறுதி செய்தது காங்கிரஸ்.

பின்னர் ராஜீவ் காந்தி மக்கள் செல்வாக்கைப் பெற்று யாரும் அசைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மையான  மக்களவைத் தொகுதிகளைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை கைப்பற்றினார். வாரிசு அடிப்படையில் அரசியல் களத்துக்கு வந்த ராஜீவ் காந்தி மக்களின் அபிமானத்தைப் பெற்று மக்கள் சக்தியாக மாறினார்.  ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பின் 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்  வெற்றிபெற்ற போதும் பிரதமர் பதவிக்கு வர சோனியா காந்தி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியில் கூட எவ்வித பொறுப்புக்கும் வர மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் தோல்வி வளையத்தில் இருந்தபோது மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற சோனியா காந்தி,  காங்கிரசை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். அப்போது பிரதமர் பதவியை வகிக்க சோனியா காந்தியே விரும்பியபோதும் அவரால் பதவியேற்க முடியாத சூழல் உருவானது.  தொடர்ந்து இருமுறை காங்கிரசை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய சோனியா காந்தி,  ராகுல் காந்தியை அறிமுகப்படுத்தி மீண்டும் வாரிசு அரசியலை உறுதிப்படுத்தினார்.  ஆனாலும், இந்திரா காந்தி,  ராஜீவ் காந்தி,  சோனியா காந்தி ஆகியோரால் மக்களிடம் பெற்ற செல்வாக்கை ராகுல் காந்தியால் இதுவரை பெற முடியவில்லை.

பாஜகவில் வாரிசு அரசியல்: வாரிசு அரசியல் பற்றி பேசும் பாஜகவும், வாரிசு அரசியல் சுழலில் சிக்காமல் இருந்ததில்லை. காங்கிரஸில் கட்சித் தலைமையை வாரிசு அரசியல் ஆக்கிரமிக்கிறது என்றால் பாஜகவில் இரண்டாம் கட்டத் தலைவர் பொறுப்புகளில் வாரிசு அரசியல் வாடை வீசுகிறது.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மகன் துஷ்யன்சிங் இப்போது மக்களவை உறுப்பினராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகன் பங்கஜ்சிங் எம்.எல்.ஏ.வாகவும்,  முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன், மகள் பூனம் மகாஜன் எம்.பி.யாகவும் உள்ளனர். மேலும்,  மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே மாநில அமைச்சராக இருந்தார். இப்போது கட்சியில் தேசிய செயலராகவும் உள்ளார்.  மற்றொரு மகள் பிரீத்தம் முண்டே மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். எடியூரப்பா மகன் ராகவேந்திரா மக்களவை உறுப்பினராகவும் உள்ளார்.  முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன் பியூஸ் கோயல் இப்போது மத்திய அமைச்சராக உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் இப்போதும் மக்களவை உறுப்பினராகவே தொடர்கின்றனர்.

மாநில கட்சிகள்: அப்போதைய காஷ்மீரின் பிரதமராக பதவி வகித்த ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா, பேரன் ஓமர் அப்துல்லா ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். மக்கள் ஜனநாயக கட்சியை உருவாக்கிய முப்தி முகம்மது சயீத் முதல்வராகவும், அவரைத் தொடர்ந்து அவரது மகள் மெக்பூபா முப்தி முதல்வராகவும் தொடர்ந்தார்.

உத்தரபிரதேசத்தில் முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் அஜித் சிங் மத்திய அமைச்சராகவும், அவரது மகன் ஜெயந்த் சௌத்ரி மக்களவை உறுப்பினராகவும் உள்ளார்.  முன்னாள் முதல்வர் முலாயம்சிங் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார். அவரது குடும்பத்தில் கணக்கில் அடங்காத எண்ணிக்கை ஆட்சியிலும்,  கட்சியிலும் கோலாச்சினர். பீகாரில் லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர், தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராகவும் பதவி வகித்தனர். மகள் மிசா பாரதி எம்.பியாக இருந்தார்.

ஹரியானாவைப் பொறுத்தவரை, முன்னாள் துணை பிரதமர் தேவிலால் மகன் ஓம்பிரகாஷ் சௌதாலா  முதல்வராகவும், அவரது மகன் அபைசிங், அஜய்  சிங் அமைச்சர்களாகவும், அஜய்சிங் சௌதாலா மகன் துஷ்யன் சௌதாலா ஜனநாயக ஜனதா கட்சி என தனிக்கட்சியை உருவாக்கி பாஜக கூட்டணியில் இப்போது துணை முதல்வராக தொடர்கிறார். காங்கிரஸ் கட்சியில் பூபேந்திரசிங் ஹூடா முதல்வராகவும், அவரது மகன் பிபேந்திரசிங் ஹூடா மாநிலங்களவை உறுப்பினராகவும்  உள்ளனர். ராஜஸ்தானில் ராஜேஷ் பைலட் மகன் சச்சின் பைலட் துணை முதல்வராக இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் சரத்பவார் மகள் சுப்ரியாசுலே மக்களவை உறுப்பினராக உள்ளார். அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார். பால்தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அவரது மகன்  ஆதித்ய தாக்கரே மாநில அமைச்சராகவும் உள்ளார்.  ஒடிசாவில் முன்னாள் முதல்வரான பீஜு பட்ஜனாயக் மகன்,  நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார்.

தென்னிந்தியா: முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் இளைய மகன் குமாரசாமி முதல்வராகவும், அவரது  முதல் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. வாகவும் பதவி வகித்துள்ளனர்.  தேவ கௌடாவின் மூத்த மகன் ரேவண்ணா அமைச்சராகவும்,  அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா மக்களவை உறுப்பினராக உள்ளார்.  குமாரசாமியின் மகன் நிகில் தேவ கௌடா கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  தேவகௌடாவைப் பொறுத்தவரை அவரது கட்சியோ சிறியது, ஆனால், குடும்ப வாரிசுகள் எண்ணிக்கையோ அதைவிட என சலிப்புத்தட்டும் அளவுக்கு வாரிசு அரசியலைத் திணித்துள்ளார்.

அதேபோல், நடந்து முடிந்த தேர்தலில் முதல்வர் வாய்ப்பைத் தவறவிட்ட சித்தராமையா தன் குடும்பத்திலிருந்து அடுத்த முதல்வரை உருவாக்கும் விதமாக தன்னுடைய மகன் யதீந்திராவை ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக்கியுள்ளார்.

தனித் தெலங்கானாவை போராடி பெற்று முதல்வராக அரியணையில் அமர்ந்த சந்திரசேகர் ராவ் முதல்வராகவும், அவரது மகன் கே.டி.ராமாராவ் அமைச்சராகவும்,  மகள் கவிதா மேல்சபை உறுப்பினராகவும் தொடர்கின்றனர். ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார்.  சந்திரபாபு நாயுடு மகன் நரலோகேஷ் மேல்சபை உறுப்பினராக உள்ளார்.  ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. வாக உள்ளார்.  மூத்த மகன் ஹரிகிருஷ்ணா மக்களவை உறுப்பினராக இருந்தார். மகள் புரந்தேஸ்வரி மத்திய அமைச்சராக இருந்தார்.  ஆந்திர முன்னாள் முதல்வர் ஓய்எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது முதல்வராக உள்ளார். ராஜசேகர ரெட்டியின்  தம்பி விவேகானந்த ரெட்டி மக்களவை உறுப்பினராக இருந்தார். ராஜசேகர ரெட்டியின் மகள் சர்மிளா ரெட்டி கட்சிப் பொறுப்பில் இருந்து அரசியல் செய்து வருகிறார்.

தமிழகத்தில்….

தமிழகத்தில் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்த முத்தரங்க முதலியாரின் மருமகன் பக்தவத்சலம் முதல்வராகப் பொறுப்பேற்றார். பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். ராஜாஜி முதல்வராகவும், அவரது மகன் நரசிம்மன் மக்களவை உறுப்பினராக இருந்தார்.  குமாரமங்கலம் குடும்பத்தில் சுப்பராயன் முதல்வராகவும் அவரது மகன் மோகன் குமாரமங்கலம் மத்திய அமைச்சராகவும் இருந்தனர். பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவராகவும் உள்ளார். பார்வதி கிருஷ்ணன் உள்பட இன்னும் சிலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கியப் பதவியில் இருந்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வாகவும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. என பல காங்கிரஸ் தலைவர்களும் சளைத்தவர்கள் அல்ல. திமுக தலைவரான மு.கருணாநிதி முதல்வர்,  மகன் மு.க.ஸ்டாலின் முதல்வர்,  மூத்த மகன் மு.க.அழகிரி மத்திய அமைச்சர்,  மகள் கனிமொழி மக்களவை உறுப்பினர், ஸ்டாலின் மகன் உதயநிதி சட்டப்பேரவை உறுப்பினர்.  அன்பழகன் பேரன் அறிவழகன் எம்.எல்.ஏ. வாக உள்ளார்.  கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் மத்திய அமைச்சர், அவரது மகன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர்.  திமுகவில் கருணாநிதி போல, பெரும்பாலான இரண்டாம் கட்டத் தலைவர்கள்,  மாவட்டச் செயலர்களின் வாரிசுகள் அரசியலில் இருக்கின்றனர்.

வாரிசு அரசியலுக்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. அதிமுகவைப் பொறுத்தவரை ஓ.பி.ஸ். மகன் ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினராக உள்ளார்.  ஜெயக்குமார் மகன் ஜெயவரதன் மக்களவை உறுப்பினராக இருந்தார்.  பாமகவில் எங்களது குடும்பத்தில் இருந்து யாராவது பதவிக்கு வந்தால் என்னை முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என பேசிய ராமதாஸ், அவரது மகன் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்கி,  மத்திய அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்த்தார். இப்போது பாமகவின் எதிர்காலத் தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணியை உருவாக்கிவிட்டார். மேலும், திண்ணைப் பிரச்சாரம் செய்தாவது அன்புமணி ராமதாஸை முதல்வராக்கி விடவேண்டும் என்று தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ராமதாஸ்.

இந்தியாவில் பொதுவெளிகளில் வாரிசு அரசியலின் மீது அதிருப்தி, மக்களிடையே காணப்பட்டாலும் தேர்தல் வெற்றிகளில் அது பெரும்பாலும் வெற்றிக்கான வழிகளாகவே உள்ளது.  இன்றைய சூழலில் வார்டு உறுப்பினரிலிருந்து பிரதம வேட்பாளர் வரை வாரிசுகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது, சரி, தவறு என்பதைக் கடந்து சாதாரண பொதுமக்களுக்கும் தேர்தல் அரசியலில் இருந்த இடத்தை, இந்த வாரிசு அரசியல் முறை பறித்துள்ளது. பிறப்பின் அடிப்படையில் எங்களைப் புறக்கணிக்கக் கூடாது என வாரிசுகள் சொன்னாலும், அது மட்டுமே உங்களின் தகுதியில்லை என்பது பொதுமக்களின் கருத்துகளாக இருக்கின்றன. எது, எப்படியே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது.

வாரிசு அரசியலில் முதலிடம் பிடித்த காங்கிரஸில், ராஜீவ் காந்தி வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில் ராகுல் காந்தியால் தந்தையைப் போல அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.   மக்கள் ஏற்றுக்கொண்டால் தான் வாரிசுகள் கூட அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

பெட்டி செய்தி

தகுதி இருந்தால் மட்டுமே

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இந்தியாவின் வாரிசு அரசியல் என்பது வெகு காலமாகவே இருந்து வருகிறது. தலைவரின் மகனுக்கோ அல்லது இரண்டாம் கட்டத் தலைவர்களின்‌ வாரிசுகளுக்கோ கட்சியில் இருக்கும் மற்றவர்களை விட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வாய்ப்பை மட்டும்தான் தலைவர்களால் பெற்றுக்கொடுக்க முடியுமே தவிர மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு உழைக்க வேண்டியது அவசியம். முன்னாள் பிரதமர் அச்சாரம் சிங்கின் மகன் அஜித் சிங்கை மாநிலம் தழுவிய தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேவேளை சங்கங்களின் சீடரான முலாயம் சிங் யாதவை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் ஸ்டாலின் தன்னுடைய 50 ஆண்டு உழைப்பால் தலைவராக உயர்ந்துள்ளார். தகுதி இருந்தால் மட்டுமே ஒரு ஆண் வாரிசு அரசியலில் நிலை பெற முடியும் என்பது உண்மை‌.