ஆமைக்கறி சாப்பிட்டதால் 7 பேர் உயிரிழப்பு

டான்சானியா தீவில் ஆமைக்கறியை சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டான்சானியவின் பெம்பா என்ற தீவில் சுவை மிகுந்த உணவு பதார்த்தமாக ஆமை இறைச்சி இருந்து வருகிறது. இங்கு 5 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆமை இறைச்சியுடன் கடந்த வியாழன் அன்று விருந்து சாப்பிட்டுள்ளனர். அடுத்த நாள் விஷத்தின் தாக்குதல் அவர்களுக்கு உணரப்பட்டுள்ளது.

ஆமைக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்த 7 பேரை தவிர்த்து மொத்தம் 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஆமை இறைச்சி சாப்பிடுவதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். 7 பேர் உயிரிழப்புக்கு ஆமை இறைச்சி விஷமாக மாறியதே காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த வகை விஷத்தை கெலானிடாக்ஸிம் என்று வல்லுனர்கள் அழைக்கின்றனர்.

நச்சுத்தன்மை வாய்ந்த உணவை ஆமைகள் சாப்பிட்டதால், அதனை சாப்பிட்டவர்கள் விஷத்தின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக ஆமை பராமரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.