சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடத்திய கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை மாநகரை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் மாநகர காவல் ஆணையர், விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக பிரதீப் குமார் கடந்த வாரம் பெற்றுக் கொண்டார். கோவையை விபத்தில்லா நகரமாக உருவாக்க வேண்டும் என்றும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பேன் என்றும் அவர் பதவி ஏற்பு நாளில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் அவர் சக்தி சாலையில் உள்ள சரவணம்பட்டி சோதனைச்சாவடி, அவிநாசி சாலையிலுள்ள சின்னியம்பாளையம் சோதனைச்சாவடியில் திடீரென ஆய்வு நடத்தினார்.

அப்பொழுது சோதனைச் சாவடிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனிடையே அப்பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களிலும், சீட் பெல்ட் அணியாமல் கார்களிலும் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்திய காவல் ஆணையர், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார்.

மேலும் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளிடம், விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மட்டும் விதிக்காமல் அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.