3 வேளாண் சட்டங்கள் ரத்து: இரு அவைகளிலும் நிறைவேற்றம்

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சீர்திருத்த சட்டங்களான விவசாய விளைபொருட்கள் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டங்களுக்கும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்த்து ஓராண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேத்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை அதற்கான ஒப்புதலையும் வழங்கி இருக்கிறது.

அரசின் கொள்கைகளுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினாலும், நாடாளுமன்ற அவைகளின் கண்ணியம் நிலைநாட்டப்பட வேண்டும் என உறுப்பினர்களுக்கு மோடி அறிவுறுத்தினார். அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தவும், உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் 3 பேர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகம் சார்பில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், திமுகவை சேர்ந்த, கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் மற்றும் அப்துல்லா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.