ஜெய்பீம்; அரசியலுக்கு வருகிறாரா சூர்யா?

ஜெய்பீம் திரைப்படம் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சூர்யா மேற்கொண்டு வரும் நகர்வுகள், அவர் அரசியலுக்கு வர முன்னோட்டம் பார்க்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழக சினிமா என்பது தமிழக அரசியலைப் பின்தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 1950, 1960 காலகட்டங்களில் தமிழ் சினிமா குடும்பக் கதைகள், காதல் கதைகள், சில மேல் ஜாதி பண்ணையார்களை வைத்து எடுத்த கதைகள் என சில பிராமணர்களையும் கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்டன. இதற்கிடையே சிவாஜி கணேசனின் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பக்தி படங்களும் வந்தன.

இதற்கடுத்து 1980 க்கு பிறகு இடைநிலை சாதியினரை மையமாக வைத்துத் தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. குறிப்பாக முக்குலத்தோர், கொங்கு வேளாளர் கவுண்டர்கள்ஆகியோரை மையமாக வைத்து கமல்ஹாசன், சத்தியராஜ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர்களைக் கதாநாயகர்களாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெற்றிபெற்றன. இதே காலகட்டத்தில் தான் இச்சமூகங்கள் திமுக, அதிமுகவில் அதிகார மையங்களாக மாறத் தொடங்கினர்.

2000 க்கு பிற்பகுதியில் இயக்குநர் ஹரியின், சாமி, சிங்கம் போன்ற ஒரு சில படங்களில் நாடர்களை மையமாக வைத்து நேரடியாக காட்டவில்லை என்றாலும் மறைமுகக் குறியீடுகள் மூலம் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை அத்தகைய திரைப்படங்களில் வில்லனின் சமூகத்தைக் குறிப்பிடாமல் விட்டிருந்தார். இதன் பிறகு தமிழகத்தில் பொதுவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களே உலாவந்தன.

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் தலித் கதைகள் பரவலாக வசூலைக் குவிக்கத் தொடங்கின. குறிப்பாக இயக்குநர் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் தலித்களை மையமாக வைத்து எடுத்த அனைத்து திரைப்படங்களும் வெற்றிபெற்றன. ரஜினியை வைத்து பா.ரஞ்சித் எடுத்த காலா, கபாலி வெற்றிபெற்றன. அதேபோல, அசூரன், கர்ணன் ஆகிய திரைப்படங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன.

இதற்கு அடுத்தப்படியாக ஹிந்துத்வா உணர்வுடன் கூடிய வன்னியர் கதைகளான ருத்ரதாண்டவம், திரௌபதி ஆகிய மோகன்ஜியின் திரைப்படங்கள் கூட வெற்றியைப் பெற்றன. இதற்கிடையில் தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர் ஆகிய திரைப்படங்களுக்கும் அதிமுக, பாஜக எதிர்ப்பை மையப்படுத்தி பெரும் வெற்றியைக் குவித்திருந்தார் விஜய். இத்தகைய சூழலில் சமூகங்களை வைத்து திரைப்படம் எடுத்தால் வெற்றிக்கனியை பறிக்கலாம் என்பதை திரைப்பட இயக்குநர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் களத்தில் பின்தங்கியிருந்த சூர்யா, ஜெய்பீம் திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் வெளியிட்டு பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளார். இக்கதை 1993 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடந்த சம்பவம் எனக் கூறப்படுகிறது. இப்போது நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சந்துரு, வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கு இது.

இதை இயக்குநர் ஞானவேல் திரைப்படக் காவியமாக்கியுள்ளார். இத்திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது உண்மை. இப்படத்தில் வெள்ளைத் தாளில் கரும்புள்ளி வைத்தது போல இருக்கும் சம்பவம் உண்மைக் கதையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி சாமி என்ற கிறிஸ்தவர். திரைப்படத்தில் அவரை குருமூர்த்தி எனக் காட்டியுள்ளனர். அதேபோல அவரின் வீட்டில் இருக்கும் ஒரு காட்சியில் அக்னி கலசம் இருக்கும் ஒரு காலண்டரையும் காட்டியிருந்தனர்.

இதை இரண்டையும் மையமாக வைத்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜெ.குருவின் மருமகன் மனோஜ், பாமகவின் இணை செய்தி தொடர்பாளராக இருந்த கண்ணன் சத்திரியர், இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் இப்படத்துக்கு எதிராக விமர்சனத்தை வைத்தனர். இதற்கு பதில் அளித்திருந்த சூர்யா தான் ஆவணப்படம் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

இதன் மூலம் கதாபாத்திரத்தில் பெயரை மாற்றும் சுதந்திரம் படைப்பாளிக்கு உள்ளது என்பதை அவர் கூறுகிறார். அதேபோல அக்னி கலசம் காலண்டரை, மஹாலட்சுமி படம் பொறித்த காலண்டராக மாற்றியுள்ளார். இதற்குப் பிறகும் இவ்விஷயத்தை கைவிடாமல் இப்பிரச்சினையை ஒரு சிலர் கையில் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலர் சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் தருவதாகவும், இனிமேல் தங்களது பகுதியில் சூர்யா திரைப்படங்களை திரையிட முடியாது என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பாமக வழக்குரைஞர் பாலு, நஷ்டஈடு கேட்டு வழக்குப்பதிவு செய்து சூர்யா, அமேசான் தணிக்கை வாரியம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளினால் இப்படத்துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. இவ்விஷயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருந்தாலும், அக்காட்சியை வைத்தது தவறு என்று வன்னியர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார்.

இந்த வகையில் சத்தமே இல்லாமல் வன்னியர் வாக்குகளைக் கவரும் உத்தியையும் சீமான் கையாண்டுள்ளார். அன்புமணி, சூர்யாவுக்கு எழுதிய கடிதமும், சூர்யா, அன்புமணிக்கு அளித்த பதில் கடிதமும் மென்மையாக இருந்திருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பகுதி பெரும்பான்மையாகவும் இல்லாமல், ஒட்டுமொத்த எண்ணிக்கையும் இல்லாமல் இருக்கும் இருளர் சமூகத்தின் சமூக நீதிக்குரல் இதுவரை வெளியில் தெரியாமலே இருந்தது. ஆனால், ஜெய்பீம் திரைப்படம் மூலம் குரலற்றவர்களாய் இருக்கும் இருளர்களின் குரல் சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பதை மையமாக வைத்து போராட்டம் நடத்தி அதில் வெற்றிகண்டது பாமக. ஆனால், பேரவைத் தேர்தல் முடிந்து 6 மாத காலம் முடிவதற்குள் வன்னியர் இடஒதுக்கீடு மதுரை உயர் நீதிமன்ற கிளையால் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருக்கும்போது 23 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே பாமகவால் வெற்றிபெற முடிந்தது. தங்களால் அதிமுகவுக்கு லாபம், அதிமுகவால் தங்களுக்கு லாபம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட பாமக, கூட்டணியில் இருந்து விலகி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் கண்டது.

இதனால், அதிமுக, பாமக என இரு கட்சிகளுமே பின்னடைவைச் சந்தித்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில், பாமகவுக்கு எந்த ஒரு அரசியல் நிலைப்பாடும், முக்கியத்துவத்தைப் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதற்காக ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையை கையில் எடுத்திருக்கலாம் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

சூர்யாவைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அகரம் அறக்கட்டளை நடத்தி ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளித்து வருகிறார். அதேபோல, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, வேளாண்

திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார். இப்போது ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை மூலம் பாமகவுக்கு எதிராக உறுதியான அறிக்கையை வெளியிட்டு, அதற்கு எதிரான சமூகங்களின் ஆதரவையும் பெறும் முயற்சியிலும் சூர்யா இறங்கியுள்ளார்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது கூடிய விரைவில் அரசியலில் சூர்யா களம் இறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 25 ஆண்டுகளாக அரசியல் ஆர்வம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தனது திரைப்படங்களை வெற்றித் திரைப்படங்களாக மாற்றிய உத்தியை நடிகர் ரஜினி காந்த் கையாண்டார் என்ற கருத்து நிலவியது. அதுபோல உத்தியைக் கையாளுகிறாரா அல்லது எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் போல அரசியல் ஆர்வ திட்டத்துடன் சூர்யா இருக்கிறாரா என்பது போகப் போக தெரியும்.

சூர்யா அரசியல் சக்தி அல்ல

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, பொதுவாகவே தமிழகத்தில் சமூகங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைப் பெறுகின்றன. இந்தப் படமும் அப்படி ஒரு கதைக் களம் தான். படம் தரமாக இருந்தாலும் இந்த சிறு சர்ச்சையை தவிர்த்திருக்கலாம். அந்தக் கேரக்டரை மாற்றிய பிறகு பாமகவும் இந்த விஷயத்தைக் கைவிட்டு இருக்கலாம்.

சூர்யா அன்புமணி ராமதாசுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்கும் போதும், திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்ததைப் பார்க்கும் போதும், நடிகர் விஜய் போல சூர்யாவிற்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது என்ற எண்ணம் தோன்றுகிறது. குறிப்பாக, விஜய் கரையில் நீச்சல் அடித்த பிறகு, சூர்யாவுக்கும் நீச்சல் போடும் ஆசை வந்து இருக்கலாம். ஆனால் இன்றைய நிலைக்கு சூர்யா அரசியல் சக்தி அல்ல என்பதே உண்மை. பின்வரும் காலங்களில் சூர்யா எத்தகைய செயல்பாடுகளைச் செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.