கோவை மாணவி தற்கொலை சம்பவம் பெற்றோர் நண்பர்களானால்…

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது பல அதிர்வலைகள் எழுவதும் செய்திகள் பரவுவதும் அதன் பிறகு மறந்து விடுவதுமாக நமது சமூகம் வேறு வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.

விசாரணை முடிந்த பிறகு இன்னும் பல உண்மைகள் வெளியாகக் கூடும் என்றாலும் இந்த மாணவியின் மரணம் என்பது ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்கு மட்டும் இழப்பு அல்ல, இது மொத்த சமூகத்திற்கும் இழுக்கு என்றே கொள்ள வேண்டும்.

முதலில், பொதுவெளியில் கருத்து சொல்பவர்கள் குறிப்பாக சமூக ஊடகங்களில் செய்திகளைப் பகிர அவர்களுக்கு எந்தவிதமான விதிமுறையும் மனசாட்சியும் இருப்பதாக தெரியவில்லை. சட்டப்படி இதுபோன்ற பாலியல் சீண்டல் நிகழ்வுகளில் தொடர்புடைய பெண்ணின் பெயர், குடும்பம், முகவரி என்று எவற்றையும் வெளியிடக் கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் பார்த்தால் மானாவாரியாக கமெண்ட் போட்டு தங்களுடையத் திறமையை நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் தன் வாழ்நாளில் செலவிடும் இடம் பள்ளிக்கூடம். இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இதனைப் பொறுப்புடன் தெரிந்து வைத்திருக்கக் கூடிய கடமை ஆசிரியர்களுக்கு தான் அதிகம் உண்டு. ஏனென்றால் அவர்கள் தான் இந்தக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடக் கூடியவர்கள். இன்றைய சூழலில் ஒரு பெண்குழந்தை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நம்பித் தான் அனுப்பப்படுகிறது.

முதலில் பள்ளி ஆசிரியர்கள் குறித்த ஒரு தகவல் திரட்டு அந்தந்தப் பள்ளிகளில் இருக்க வேண்டும். குறிப்பாக பெண் மாணவிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் எதையும் வெளிப்படையாகச் செய்வதாக ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும். எல்லா பள்ளிகளிலும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பாலியல் சீண்டல் குறித்து மாணவ மாணவியருக்கு எடுத்துரைப்பதற்காக பொருள் கலந்தாய்வு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கென்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வெளியில் இருந்து ஒரு துறைசார்ந்த வல்லுனர் குழு நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக கவுன்சலிங் அளிக்க வேண்டும். இது தொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக விசாரித்து அதற்கான நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும், அவர்களின் சுற்றமும், சமூகமும் பெண் குழந்தையை நேர்மையான முறையில் இதுபோன்ற சிக்கலின் போது அணுக வேண்டும். இதில் மூடி மறைக்க ஒன்றுமில்லை என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத வயதில் ஒரு பெண் குழந்தை தவறான திசையில் காலடி எடுத்து வைத்தால் கூட திருத்த வேண்டிய முதல் மற்றும் முழுமையான கடமை குடும்பத்துக்குத் தான் உள்ளது.

இதுபோன்ற சீண்டல் உள்ளிட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அன்பும், அனுசரணையும், நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயமும் முதலில் குடும்பத்திற்குத் தான் உண்டு. இதற்கு அடிப்படையான காரணம் நமது சமூகத்தில் பெண்களை நடத்தும் விதம் இன்னும் மாறவில்லை என்பது தான். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நேரடியாக புகார் சொல்லி அந்த சிக்கலை எதிர் கொள்ள முடியாது. அந்த அளவுக்கு நம்முடைய சமூகம் நடைமுறையில் பெண்களுக்கு எதிராகவே இருக்கிறது. அதேசமயம் இந்த பாலியல் சீண்டல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் தப்பி விடுகின்றனர். இது ஒரு பாடமாக மாற வேண்டியது தவறிப்போய், வசதியாக மாறிவிடுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பிறகு அரசாங்கம், காவல் துறை, நீதிமன்றம் போன்றவை என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு முதல் கடமையாக அதைத் தடுப்பதற்கான சில ஏற்பாடுகளைச் செய்வதுதான் முறையாக இருக்கும். அது குடும்பத்தில் தொடங்கி, பள்ளியில் முடிகிறது. இதில் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், பள்ளியைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

ஜனத்தொகை தொடர்ந்து அதிகரித்தே வரும் நிலையில், நம் குழந்தைகளின் அறிவு சம்பந்தமான தேவைகளுக்கு இங்கு அதிகப்படியான பள்ளிகள் தேவைப்படுகிறது. ஒரு அரசு பள்ளி புதிதாக தோன்றினால் அதே நேரத்தில் எத்தனை தனியார் பள்ளிகள் பிறக்கின்றன. அவற்றில் பணிபுரிய நிச்சயம் மிகுதியான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

ஒரு பள்ளியில் ஆசிரியராக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் அவருடைய கல்வி அறிவுசார்ந்த திறன்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும். நம் குழந்தைகளுக்கு வெறும் கல்வியறிவு மட்டும் போதுமா?

ஒரு ஆசிரியரின் பேச்சு, பண்புகள், அணுகுமுறை என அனைத்தும் மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பதால், பணியில் அமர்த்தும் முன்பு அவருடைய குணம், மாணவர்கள் நலனிற்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உள்ளனவா என்று மதிப்பீடு செய்யப்பட்டபின் நியமனம் செய்யவேண்டும்.

”நல்ல ஆசிரியர்கள் வேண்டும்” என்பது போல், பெற்றோர்களும் குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகள் மீது சிறப்பு அக்கறை கொண்டு, அவர்களின் இயல்பான வாழ்க்கை முறையில் மாற்றம் கடுகளவு இருந்தாலும் கவனிக்கத் தவறக் கூடாது. நண்பர்கள், தோழிகள் யாராக இருந்தாலும் அவர்களை அறிந்து வைத்துக் கொள்வது இந்தக் காலத்தில் அவசியமாகி உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பாடங்களில் மட்டும் மாணவ மாணவியர் திறமைசாலிகளாக ஜொலிக்கவேண்டும் என்று கருதாமல், அவர்கள் நிஜமான வாழ்க்கையின் அர்த்தத்தையும் அறிவையும் எட்ட வாழ்க்கைப் பாடங்களையும் அவர்களிடம் சேர்க்க வேண்டும்.

பள்ளிப்பருவம், காதற்பருவம், குடும்பப்பருவம், தளர்ச்சிப்பருவம் என்றால் என்ன என்றும், அதற்கான குணமும் அடக்கமும் என்ன என்று தெளிவுபடுத்தும் செம்மையான தமிழ் இலக்கிய நூல்கள், தமிழ் மொழியிலும், பிற மொழியிலும் உள்ள ஹைக்கூ, சிறுகதை, புதுக்கவிதை, புதினம் ஆகியவற்றை நிச்சயம் பள்ளி மாணவர்கள் இளம் பருவத்தில் கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இவை அனைத்தும் நல்ல அனுபவங்களை, தெளிந்த பார்வையை மாணவ மாணவியருக்குத் தரும். இதனுடன், பெற்றோர்கள் முடிந்தளவு தங்கள் பிள்ளைகளை கடிந்துகொள்ளாத காவலராகவும், நம்பிக்கைதரக்கூடிய நண்பராகவும் இருக்கவேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் குட் டச், பேட் டச் போன்ற விழிப்புணர்வுக் கூட்டங்களை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

உளவியல் ஆலோசகர் ஒருவர் மூலமாக ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பாலியல் தொந்தரவுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு இதுகுறித்து சம்பவங்கள் நிகழும்போது அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.

இதைச் சட்டத்தின் கட்டாயத்திற்காக அல்லது சடங்குக்காக என்ற நிலையில் இல்லாமல் மனசாட்சிப்படி நடக்க வேண்டியது மனித சமூகத்தின் கடமையாகும். இனி ஒரு விதி செய்து அதை எந்நாளும் காப்போம், மனித மாண்பு மீட்போம்!