மூச்சுவிடத் திணறும் டெல்லி!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் வருவது போல சென்னையில் புயல், வெள்ளம், மழை ஆகவே வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் டில்லியில் வேறு ஒரு கதை தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த பனிக்காலத்தில் நகரமே மூச்சுத் திணற ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆண்டும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு காற்று மாசுபாடு அங்கே டில்லி நகரத்தைச் சூழ்ந்திருக்கிறது. இந்தியாவின் தலைநகரம் மங்கலாக காட்சி தருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள் தரும் தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக உள்ளன.

குறிப்பாக தீபாவளிக்கு பிறகான இந்த காலகட்டத்தில் வழக்கமாக அங்கே குளிர்காலம் என்பதால் குளிரும் பனியும் இருக்கும். அங்கே இந்த காற்று மாசுபாடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒரு முக்கியமான காரணமாக வடமேற்கில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ள கோதுமை வயல்களில் அறுவடை முடிந்த பிறகு மீதியுள்ள பயிர்க் கழிவுகளை சேகரித்து, தீ வைத்துக் கொளுத்துவது தான் வழக்கம். அந்தப் புகை பல கிலோ மீட்டர் பயணம் செய்து காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு உ‌ண்டு. அதில் உண்மையும் உண்டு. பயிர்க் கழிவை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழிகளைக் கண்டறியும் படி அறிவியலாளர்கள், சுற்றுச் சூழலியலாளர்கள் உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் இதுகுறித்த வழக்கு, டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெறும் புகை மட்டும் இந்த காற்று மாசுபாடுவதற்கு காரணம் அல்ல என்று உண்மையை தெளிவாகக் கூறியுள்ளது. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், அவற்றிலிருந்து வெளியேறும் புகை, இங்கு பயணம் செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களின் புகை ஆகியவையு‌ம் தான் முக்கியக் காரணம் என்று உறுதிபடக் கூறி இருக்கிறது. இதில் டெல்லிக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள மற்ற பெரு நகரங்களுக்கும் வளர்ந்து வரும் சிறு நகரங்களுக்கும் கூட பொருந்தும்.

இந்தக் காற்று மாசுபாடு என்பது மற்ற நில, நீர் மாசுபாடுகளைப் போல கண் முன்னே தெரிவது அல்ல. ஆனால் கொஞ்சமும் குறைவில்லாமல் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல சிக்கல்களைச் சத்தமில்லாமல் கொண்டு வரக்கூடியது. சிறிது சிறிதாக மனிதர்களின் நுரையீரலைப் பாதிக்கக்கூடியது. அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் கூட சுவாசக்கோளாறு உள்ளதாக மாற்றக்கூடிய வல்லமை இந்த காற்று மாசுபாட்டுக்கு உண்டு. தற்போது உள்ள கொரோனா போன்ற பெரும் நோய் ஏற்பட்டுள்ள சூழலில் இது தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.

இன்றைய சூழலில் உலக அளவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாக பேசப்படும் பருவநிலை மாற்றத்தில் முக்கியப் பங்கு இந்த கார்பன் உமிழ்வுக்கு உண்டு. இது போன்ற செய்திகளில் முக்கியப் பங்கு காற்று மாசுபாட்டுக்கும் உ‌ண்டு. இந்த நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழிற்சாலைகளும் முக்கியம்; சுற்றுச்சூழலும் முக்கியம்; அதே நேரத்தில் காற்று மாசுபாடு உருவாக்கும் நோய்கள் ஒருபுறம் என்று பல்வேறு விதமான தாக்கங்கள் உள்ளன. எனவே காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வும், அதனை எதிர் கொள்ளும் செயல்பாடுகளும் மிக மிக அவசியமாகின்றன.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. என்றாலும் உண்மையில் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள வளரும் நாட்டில் பொருளாதார வளமானது நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் தான் உள்ளன என்பது மிக முக்கியமான உண்மை. அங்கெல்லாம் இட நெருக்கடியும் காற்று மாசுபாடும் பிரிக்க முடியாததாக இருக்கின்றன. அதுவும் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் மிகப் பெரும்பாலான பகுதிகள் நகர்ப் புறங்கள் ஆக இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாடு போல இங்கும் எதிர்காலத்தில் உருவாகாமல் காப்பது மிகவும் அவசியம்.

அவசியமற்ற ஆடம்பரமான போக்குவரத்துகளை தவிர்த்தல், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், மின்சார வாகனத்தைப் பயன்படுத்துதல், சைக்கிள் போன்ற சூழலுக்கு ஏற்ற வாகனங்களைப் பயன்படுத்துதல், மரங்களை அதிகமாக நட்டு வளர்த்தல் உள்ளிட்ட காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

இதனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால் நீரின்றி மட்டுமல்ல, சுத்தமான காற்றும் இன்றி அமையாது உலகு.