பிஜ் – பிளேர் 2021: கல்லூரிகளுக்கு இடையேயான வணிக கருத்தரங்கு

கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள இந்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான பயர்பேர்ட் மேலாண்மை ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் வணிக கருத்தரங்கு நடைபெற்றது.

இளம் தொழில் முனைவோரையும் இளைஞர்களையும் தொழிலில் ஊக்கப்படுத்தி அவர்களது திறனையும், அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதற்கென 7 வகையான போட்டிகள் வடிவமைக்கப்பட்டன. இந்த தலைப்புகளுக்கு ஏற்றவகையில், விவாத நிகழ்வுகள் நடந்தன. இந்த வணிக கருத்தரங்கில், முதலீட்டாளர்கள், தேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் சிறப்புமிக்க தொழில் நிறுவனத்தினர் நடுவர்களாக செயல்பட்டனர்.

தென்னிந்திய அளவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பயர்பேர்ட் நிறுவனம் 2,50,000 ரூபாயை பரிசு தொகையாக அறிவித்திருந்தது. முதலிட வெற்றியாளர்களுக்கு தலா 20,000 ரூபாய் வீதமும், இரண்டாம் இடம் பெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா ) தலைவர் எம். வி ரமேஷ்பாபு தலைமை விருந்தினராக பங்கேற்றார். கௌரவ விருந்தினராக நடன கலைஞரும் நடிகையுமான காயத்ரி கிருஷ்ணா பங்கேற்றார். பயர்பேர்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் வரவேற்று பேசினார்.

கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு பேசுகையில், “இளம் தலைமுறையினரின் வணிக திறனை கண்டறிந்து, அவர்களது யோசனையை இந்தியாவின் ஸ்டார்ட் அப் இலக்கிற்கு பயன்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.

எக்கி ஹோமா பம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பயர்பேர்ட் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சுந்தர்ராமன் விழாவுக்கு தலைமை வகித்து, தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் கனிஷ்கா ஆறுமுகம் பேசுகையில், “இது போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் தங்களது தொழில்முனையும் திறனை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

நிர்வாக அறங்காவலர் சுந்தர்ராமன், “மாணவர்கள், செயல்படுத்தும் விதத்தில் கற்கவும், புதுமையாக யோசிக்கவும், ஊக்கத்துடன் பல யோசனைகளை செயல்படுத்தவும், தங்களை சந்தையில் முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.