கோவையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 38 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் 9 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகின்றது எனவும், சிறப்பு நிதி பெற்று இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாநகராட்சியில் தண்ணீர் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக மக்கள் சபை கூட்டம் சனிக்கிழமை முதல் (10.30.2021) முதல் வரும் 21 ம் தேதி வரை நடைபெறுகின்றது. மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

முதல் நாளான இன்று 6 வார்டுகளுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டறியும் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகராட்சியில் 17 வார்டுகளில் மக்கள் சபை கூட்டங்களில் பங்கேற்கிறார்.

கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் 37 பேரூராட்சி, 3 நகராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் சபை கூட்டங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடத்தப்பட இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 21 ம் தேதி வரை இந்த மனுக்களை பெறும் நிகழ்வு நடைபெற இருக்கின்றது. மிக விரைவாக கோரிக்கை மீது நடவடிக்கைகள் எடுத்து அரசாணைகள் வழங்கப்படும்.

கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 38 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் 9 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகின்றது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கும் வகையில் சிறப்பு நிதி பெற்று மாநகராட்சி முழுவதும் திட்டம் செயல்படுத்தபடும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

உயர்மின் கோபுரம், விவசாய நிலங்களில் அமைப்பது தொடர்பாக ஓரே மாதிரியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான மனுக்கள் குறித்தும் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.