மீலாது நபி விழா ஊர்வலம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் நடைபெற்ற மீலாது நபி விழா ஊர்வலத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஜாமியத் ஷேக் ஆதம் ஹஷரத் அகாடமி சார்பாக மீலாது நபி விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் மதரஸா பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கைகளில் தப்ஸ் இசைத்தவாறு நபிகள் நாயகத்தின் புகழ் மாலை பாடியவாறு சென்றனர். முன்னதாக மத நல்லிணக்கம் வேண்டியும், கொரோனா பெருந்தொற்று போன்ற அனைத்து நோய்களில் இருந்தும் உலக மக்களை காக்கவும், உலக அமைதிக் காகவும் மதரஸா பள்ளியில் சிறப்பு துவாஆ மற்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் தொடங்கிய ஊர்வலத்தில் சிறுவர், சிறுமியர் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குனியமுத்தூர், பாலக்காடு சாலை மற்றும் பிருந்தாவன் நகர் போன்ற பகுதிகள் வழியாக ஊர்வலம் மீண்டும் மதரசாவை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அந்த பகுதி குடியிரு்ப்பு வாசிகள் இனிப்புகள், பிஸ்கட்டுகள், ஜூஸ் போன்றவற்றை வழங்கி மீலாது விழா வாழ்த்துகளை தெரிவித்தனர்.