கொங்குச்சீமை செங்காற்று – 1

– சூர்யகாந்தன்

நல்ல மழை காலையில் கிளம்பும் போதே அதற்கான அறிகுறி தெரிந்தது. தெற்கு மலைகளில் மேகக்கூட்டம் பொதி பொதியாகக் குவிந்து கொண்டிருக்க கூதக்காற்றும் பரவியபடியிருந்தது. ஊரை நோக்கி வடக்கே திரும்பும்போது எப்படியும் நனையாமல் இருக்க முடியாது என்று எண்ணியது சரியாய்ப்போயவிட்டது.

இடையில் விட்டிருக்கும் வெட்டாப்பு, நீங்குவதற் குள்ளாக ஆடுகளை விரட்டிக்கொண்டு கட்டுத்தறி சேர்ந்து விட வேண்டும் எனும் துரிதத்தில் சுப்பையன் சற்று வேகமாக அதுகளை விரட்டி ஓட்டினான். போட்டிருந்த துணிகள் முழுக்கவும் நனைந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. தலைக்கு, கொங்காடையாகப் போட்டிருந்த கோணிச்சாக்கை எடுத்துப்பிழிந்து உதறித்தோளில் போட்டுக்கொண்டான்.

ஊருக்கும், மலைக்கும் மூன்று மைல் தொலைவு.

அடிவாரக்காடுகளில் ஓரம்பாறம் பார்த்து மேய்த்தாலே போதும் என்று நாள் தவறாமல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு கிளம்பி விடுவான். பத்துப் பனிரெண்டு உருப்படிகளோடு ஆரம்பித்த ஆட்டுக்கிடையானது இப்போது நூறுக்கு மேல் பெருகிவிட்டது.

சுப்பையனின் அய்யன் மாசய்யன்தான் தன்னுடைய இந்த நடுமகனைக் கட்டாயப்படுத்தி தனது பாரம்பரியத் தொழிலைச் சமர்ப்பித்தது.

நாளா சரிதியாக இதில் ஒரு லயிப்பு ஏற்பட்டு, “நமக்கு வாய்த்த தொழில் இது தான்” என்பதாகப் பிடிமானம் உண்டாகிவிட்டது. மூத்த அண்ணன்காரனும், இளைய தம்பிகாரனும் மில் வேலைக்கும், பண்ணையம் பார்க்கவும் என ஈடுபாடு வைத்தனர்.

சிறுவனாக இருந்த போதிருந்தே சுப்பையன்தான் தனது அய்யன்காரனோடு ஆடுகளை மேய்க்கப் போகும்போது அக்கறையோடு சேர்ந்து கொண்டு காடுகரைகளுக்குப் போய் வருவான்.

“எவங்கிட்டேயும் போயி கையெக்கட்டி, நிக்க வேண்டியதில்லை…! நாம உண்டு வேலை உண்டுன்னு இந்த ஆடுகளக் கருத்தாகக் கவனிச்சு மேய்ச்சாலே போதும்.- இதுக உன்ன மேலுக்குக் கொண்டு வந்திடும்டா….”

மாசய்யன் இந்த மகனின் மனதில் போட்டு வைத்து, தன் போக்கில் வேர் பிடித்து வளர்ந்து விட்டது.

குடியிருக்கும் ஊரான குளத்துப் பாளையத்துக்கு அருகாமையில் சொந்த மாக  மூன்று எக்கராப் பூமியும் மாசய்யனுக்கு உண்டு. அதில் மானாவாரி விவசாயம்தான்! கொள்ளுச்செடிகள் வருசா வருசம் அதைத் தரிசுநிலமில்லை என்று சொல்லும் படியாகச் சொற்ப விளைச்சலைக் கொடுத்து வந்தன.

அதற்கென்று “முட்டுவளி” செலவு எதையும் பெரிதாகக் கையில், இருந்து போடுவதில்லை. “மேல் உழவு ஒண்ணு! அடியுழவு ஒண்ணு” இதுதான் ஒவ்வொரு தடவையும் அது காண்கிற பலன்! பருவம் தவறாமல் மழைபொழிந்த தருணங்களில் அந்தப் பூமி கொடுத்த மகசூல் குறைவில்லாமல்தான் அமைந்தது! சோள விளைச்சலே போதும்…. எனும் படி இருந்தது.

ஊருக்குத் தென்புறமாய் தார்ரோடு ஒன்று கிழக்கு நோக்கி குனியமுத்தூருக்குச் சென்றது. அந்த ரோடு “ஆலோ பிளாக்” இறக்கத்தில் பாலக்காடு மெயின்ரோட்டைத் தொட்டு தெற்கே போனால் மதுக்கரைக்கும் அதுவே வழியாய் இருந்தது.

மதுக்கரை சிமெண்ட் கம்பெனிக்கு இந்த குளத்துப்பாளையத்தில் இருந்து பத்துப் பனிரெண்டு குடும்பத்தார்…புருசனும்,பெண்சாதியுமாய் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தனர்.

“அவிகதான் குடுத்து வெச்சவிக போங்க! மாசம் பொறந்தா கைநெறயச் சம்பளம்! காட்டு வெள்ளாமையப்பத்திக்கூடக் கவலைப்பட வேணுங்கறதில்லே! வூட்டுச் செலவுக்குப் போக மிச்சத்தை அப்பிடியே பேங்குல போட்டுறலாமே….” என்று சிலாகிப்பு அவர்களைப்பற்றி வலம் வந்தது.

“ஏனுங்க…! அப்பிடிப்பார்த்தா பக்கத்தாலெ எட்டிப் புடுச்சாப்பில இருக்குதுங்களே விஜயலட்சுமி மில்லு! அதுல சேந்தவிகளுக்கு என்னுங்க கொரச்சலுங்கிறே?”

“கொறச்சலெல்லா ஒண்ணுங் கெடையாதுங்க! அது சிமெண்ட் கம்பெனியாட்டம் வெள்ளக்காரன் காலத்துல கட்டுனதல்லுங்க…”

“ஆமாமா…! இந்த கோயம்புத்தூர் ஜில்லாவுலயே ஆதிமொதல்ல ஆன மில்லுகள்ல இதையத்தானொ எல்லாருமே பெருசாச் சொல்றாங்க…”

“இந்த ஊர்ல இருந்து தானுங்க அந்த மில்லுக்கு மொதல் மொதல்னு ஆளுகளெக் கூட்டிட்டுப் போனாங்க!  அப்பவெல்லாம் நாள் கூலிதானுங்க! அப்புறம் வாரக்கூலின்னு பண்ணுனாங்க. அதுக்குப்பொறகுதா மாசச் சம்பளங்கிறதெல்லாம் இங்கே வந்ததுங்க…”

“ச் செரித்தான்…” மாசய்யனோடு மஞ்சிப்பள்ளத்து இறக்கத்தில் தோட்டத்து பண்ணையம் பண்ணும் காளியப்பன் பேசிக் கொண்டிருப்பார்.      தெற்கு மலைகளில் மழையடித்து, சதிராடியவாறு வரும் செந்தண்ணீர் சீர்க்குழிப்பள்ளத்தில் விழுந்து, மஞ்சிப்பள்ளத்தில் கலந்து மதுக்கரைக்கு வடபுறத்துக் கிளை வாய்க்காலில் சேர்ந்து கொள்ளும்.

கிழக்கேயிருந்து மேற்குப்பக்கம் அண்ணார்ந்து பார்த்தால் மழைக்கரடு களின் தொடர்ச்சி, தெற்கே அய்யாமலைக் கணுவாய் வரையிலும் பாறைச்சரங்களாய் நீள்வது தெரியும்.அந்த அடிவாரக் காடுகள் வரையிலும் கூட சுப்பையன் தனது அய்யனோடு இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு திரிந்திருக்கிறான்! எல்லா இடங்களுமே அவன் கால்களுக்கு அத்துப்படி.

“கண்ணைக்கட்டிக் காட்டுல கொண்டுபோய் வுட்டாக் கூட வழி மாறாம வந்து சேர்ந்திருவானுங்க” என்பார் மாசய்யன், மகனைப் பற்றி பெருமையாக.

மழைக்காற்றின் ஈரப்பதத்திலும், அங்கே படர்கிற வெய்யிலின் கதகதப்பிலும் பயிர்கள் செழிப்பாக வளர்வதைப் போன்றே அங்கு மேய்ந்து செல்லும் பண்டம் பாடிகளும் நன்றாகவே வளர்ந்தன. ஆடுகளும் வயிறார மேய்ந்து கெழுத்தியாக இருந்தன.

இந்த சுப்பையன் ஆடு மேய்க்கும் தொழில் ஈடுபாட்டோடு லயிப்பதற்கு இரண்டு மூன்று வருடங்கள் பிடித்தன. அந்தக் காடு, மேடு பள்ளம் பரப்பெல்லாம் இவன் பாதங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டு விட்டன.

ஆடுகளின் பின்னால் காலாற நடந்து திரிவதில் உள்ளத்துக்குக் களிப்பாகவே இருந்தது. அத்தோடு இது மாதிரி மழை துளி வந்து அகப்பட்டுக்கொள்கிற தருணங்களைச் சற்று சிரமத்தோடுதான் ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. அவற்றை அவ்வளவாகப் பொருட்படுத்திக் கொண்டதில்லை.

சில சமயங்களில் பசி கூட தோணாது! அமைதியாக மலைகளின் பின்னணியில் விரிந்து கிடக்கும் அந்தச் செம்மண் காடுகளின் குளுமையும், மரம் செடிகொடிகளின் மணமும் மனத்துக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அந்த மலைகளின் உயரத்தையும், அகலத்தையும் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோணும்.

அனாதி காலந்தொட்டு ஒரு பெரிய வீட்டைப்போல இங்கே வீற்றிருக்கும் இந்த இயற்கையின் வடிவத்தைப் பற்பல விதமாய் எண்ணிக் களிப்பவனாக இருந்தான் சுப்பையன்.

மலைப்பாதைகளில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீர், தாகத்துக்கு ஏற்றதாயிருக்கும்! சீர்க்குளிப்பள்ளத்துக்கு மேலாக “தன்னாசி குகை” என்றொரு கல்முகடு உண்டு. அதனைக் கடந்தால் எதிர்ப்படும் சுனை நீரானது கற்கண்டைப்போல சுவை கொண்டது. அதையெல்லாம் கடந்து மேலேறிச் சென்றால் மலையின் உச்சியை அடைந்து விடலாம்.

அங்கிருந்து தெற்கிலும், வடக்கிலும் பார்க்கும் போது… சிறு சிறு திட்டுக்கள் போல் கிராமங்களும், சிறு சிறு சித்திரங்கள் போல் தோட்டந்துரவுகளும் கண்ணாடிச்சுவடுகள் போல் நீர் நிலைகளும் தென்படும்.

-(தொடரும்)…