பிஎஸ்ஜி மருத்துவமனையுடன் அலர்ட் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் 10 லட்சம் பேருக்கு உயிர் காக்கும் பயிற்சிமாவட்ட ஆட்சியர்

சமூக பணியில் ஈடுபட்டு வரும்  அலர்ட் (ALERT – Amenity Lifeline Emergency Response Team) அமைப்பு அவசர காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவதற்கான பயிற்சியை பொதுமக்களுக்கு அளிக்க கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையுடன் சனிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட்டு உயிரை காப்பது என்பது குறித்த பயிற்சியை அலர்ட் அமைப்பு வழங்க உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் அலர்ட் அமைப்பின் ‘கோல்டன் ஆர்மி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர்  சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், அத்வைத் லக்ஷ்மி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ரவி சாம் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அலர்ட் என்.ஜி.ஓ அமைப்பின் தலைவர் முரளிதரன், அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் மற்றும் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி, பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அலர்ட் அமைப்பின் தலைவர் முரளிதரன் கூறுகையில்: நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக சமூக பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் அமைப்பின் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அவசர காலங்களில் முதலுதவி அளித்து ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர். ஏபிஜே அப்துல் கலாம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவசர சிகிச்சை பற்றிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். இந்த இலக்கை அடையும் நோக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் பேசியதாவது: இந்தியாவில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைந்து வருகிறது. காவல்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் இணைந்து விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விபத்துக்களால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறந்த சேவை செய்கிறது. அலர்ட் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து மக்களிடையே முதலுதவி ஏற்படுத்த எடுத்திருக்கும் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவையில் ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை மற்றும் ‘உயிர்’ அமைப்பு இணைந்து சாலை விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன எனக் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  சமீரன் பேசியதாவது: ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது உயிர்காக்கும் பயிற்சியை தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு. அதனை ‘அலர்ட்’ அமைப்பு செய்து வருகிறது.

இதனை கோவையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் கோவையில் மட்டும் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான பணிகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கும்.

அரசு அதிகாரிகள், காவலர்களுக்கு இந்த பயிற்சியை  அளிக்கும் வகையில் அவர்களை நாங்கள் ஒருங்கிணைக்க தயாராக இருக்கிறோம்.  உணவு உண்ணும் போதும் கூட பிரச்சினை அல்லது விபத்து ஏற்படலாம். அப்போது முதலுதவி அளிக்க உயிர் காக்கும் அடிப்படை பயிற்சிகள் தேவைப்படுகிறது எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.