“கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம்”

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு போதிய நிவாரணத்தொகை வழங்காத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்துள்ளனர்.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக தமிழக அரசு ரூ. 1132யை ஒதுக்கியுள்ளது.
இந்த தொகையின் படி, ஒரு செண்ட் நிலத்திற்கு ரூ. 6 முதல் ரூ.6.5 லட்சம் வரை நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொகையை வைத்துக்கொண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் வீட்டுடன் கூடிய இடத்தை வாங்க முடியாது என்று விரிவாக்கப் பணிகளுக்காக நிலத்தை கொடுக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 25 ஆண்டுகாலம் வாழ்ந்து வந்த தங்களுக்கு கடந்த ஆட்சியில் உரிய நிவாரணம் மற்றும் மாற்று இடம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, ஆட்சி மாறியதும் வாழ்வாதாரத்தை அசைக்க அதிகாரிகள் முற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கூலி வேலைக்குச் செல்லும் தங்களால் மீண்டும் ஒரு வீடு கட்டி, அதற்கான கடனை கட்டும் திறன் இல்லை என்றும், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் கூறினர்.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பணத்தை ஒதுக்கிவிட்டோம் என அரசு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்காமல் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.