கோட்டையில் ஒலித்த கோவையின் குரல்!

வானதி சீனிவாசன், MLA, கோவை தெற்கு தொகுதி

சட்டமன்றத் தேர்தல் முடிவின் போது தமிழ்நாடே எதிர்நோக்கிக் காத்திருந்த கோவை தெற்கு தொகுதியில் பரபரப்பான இறுதி நிமிடங்களில் தனது வெற்றியை உறுதி செய்து, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் வானதி சீனிவாசன். தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற கட்சியின் மகளிரணி தலைவராக பல மாநிலங்களுக்கு அரசியல் ரீதியான பயணம் மேற்கொண்டாலும், தன் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு மக்களின் குறைகளை அறிந்து அதனையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது கோவை தெற்கிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் பொதுவான பிரச்சினை களையும் முன்னெடுத்து பேசியுள்ளார். சட்டமன்றத்தில் அவர் முன்வைத்த கோரிக்கைகளின் தொகுப்பையும், தெற்கு தொகுதியில் அவர் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் காண்போம்.

புதிய அடையாளம்:

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக பேரவையில் பேசும் உறுப்பினர்களின் பேச்சை 1952ல் இருந்தே கன்னிப் பேச்சு என்று கூறுவது வழக்கத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் தங்களது முதல் உரையிலேயே சில உறுப்பினர்கள் கவனம் ஈர்ப்பார்கள். ஆனால் தனது உரையில் ‘கன்னிப்பேச்சு’ எனக் குறிப்பிடும் வார்த்தையையே விவாதத்திற்குள்ளாக்கியுள்ளார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

“முதல் முறையாக சட்டப் பேரவையில் பேசும் உறுப்பினர்களது பேச்சை, கன்னிப்பேச்சு என்று சொல்லாமல் முதல் பேச்சு அல்லது அறிமுகப் பேச்சு என்று கூறினால் நாகரீகமாக இருக்கும். கன்னி என்கின்ற வார்த்தை இளம் வயது பெண்மையை குறிக்கும் வார்த்தை, என்னைப் பொறுத்தவரை ‘அறிமுகப்பேச்சு’ என குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்கும்” என்று கூறி தனது முதல் பேச்சிலே ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இந்தக் கருத்தை சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் பாராட்டியுள்ளனர்.

“குறைந்த பட்சம் அடுத்த சட்டப் பேரவையில் இருந்து உறுப்பினர்கள் மாற்றுச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்” என தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

மெட்ரோவும், மாஸ்டர் பிளானும்:

தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையில், சென்னைக்கு அடுத்த படியாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் கோவைக்கு மெட்ரோ ரயில் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என கோவை மக்களுக்கு வானதி வாக்குறுதி அளித்திருந்தார். கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வியையும் சட்டமன்றத்தில் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் “கோவைக்கு மெட்ரோ திட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மெட்ரோ திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் நிதியைப் பெற்று தான் பணிகளை நிறைவேற்ற முடியும்” என கூறியிருந்தார்.

“கோவை வேகமாக வளர்ந்து வரக்கூடிய மாவட்டம் என்பதால் உட் கட்டமைப்பு வசதிகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று. கோவை பகுதியில் 1994ம் ஆண்டுக்குப் பிறகு மாஸ்டர் பிளான் அறிவிக்கப்படவில்லை. அதனால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பிராந்தியத்திற்கான மாஸ்டர் பிளானை அறிவிக்க வேண்டும்”. ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல திட்டக் குழுமத்துடன் சேர்த்து செயல்படுத்தினால் அது ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு பயன்படும்.

ஒருபுறம் தொழில் வளர்ச்சி, இன்னொரு புறம் நீலகிரி, வால்பாறை, போன்ற இயற்கைச் சூழலையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த 30 வருடத்திற்கான மாஸ்டர் பிளானை தொலைநோக்குப் பார்வையுடன் அரசு அமைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோவை அமைந்துள்ள தால் சில பகுதிகளில் மனித விலங்கு மோதல் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். இதற்கு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத தளவாட உற்பத்தி வழித்தடம்:

கோவையில் டிஃபென்ஸ் இன்னோவேஷன் ஹப் (ஞிமீயீமீஸீநீமீ மிஸீஸீஷீஸ்ணீtவீஷீஸீ பிuதீ) என்பதை இந்தியாவிலேயே முதன்முறையாக அமைத்துக் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு சட்டசபையில் நன்றி தெரிவித்ததோடு இதன் வாயிலாக இந்தப்பகுதியில் இரண்டாயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் தனது உரையில் வானதி சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்களுக்கு தனி பட்ஜெட்:

விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை அறிவித்தது போல பெண்களுக்கான தனி பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் முன் வைத்துள்ளார். “தேசிய தலைவராக இருப்பதால் பல மாநிலங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. அப்படிச் செல்லும்போது குஜராத்தில் பெண்களுக்கென தனி பட்ஜெட்டை ஒதுக்கி இருப்பதை அறிந்து, அதன் செயல்பாடுகளைக் குறித்து தெரிந்து கொண்டேன். பெண்களுக்கான பல திட்டங்களை அறிவிக்கிறது தமிழக அரசாங்கம். நம் மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்படவேண்டும்” எனக் கூறுகிறார் வானதி.

இதன் வாயிலாக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களில் பெண் களுக்குச் செல்லும் நிதி குறித்த இலக்கை நிர்ணயிக்க முடியும். இதன் மூலம் அந்த திட்டத்தின் செயல்பாடுகள் மக்களுக்கு எந்தளவு சென்றுள்ளது என்பதை அறிய முடியும். எனக் கூறியுள்ளார்.

ப்ளாக் செய்தாலும் பதில்:

நிதியமைச்சரிடம் இருந்து தொகுதிக்குத் தேவையான நிதியைப் பெறுவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கூறுவது தன் கடமை என கூறும் அவர், “தமிழக நிதியமைச்சர் டிவிட்டரில் என்னை ப்ளாக் செய்திருந்தாலும் என் கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் அவர் பதில் அளித்தது எனக்கு மகிழ்ச்சியே. கோவை குறித்து அதிகம் பேசவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது”. எனத் தெரிவிக்கிறார்.

மாணவர்களுக்குப் பயிற்சி:

ஆண்டு ஒன்றிற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். நிறுவனங்களில் வேலை இருந்தும் உரிய பயிற்சி இல்லாத காரணத்தினால் பட்டதாரி இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் படிப்புக்குத் தகுந்த வேலைகளை வழங்குவதற்கு தமிழக அரசு என்ன திட்டங்களை வைத்துள்ளது என்ற கேள்வியையும் முன் வைத்தார். “நான் வேலைவாய்ப்பு முகாம் நடத்தும் போது ஒருபுறம் நிறுவனங்களில் பணிக்கான தேவை இருக்கிறது இருந்தும் அதற்கான மாணவர்கள் இல்லாத சூழலும், மறுபுறம் பட்டதாரி மாணவர்கள் இருந்தும் அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு இல்லாமலும் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை சரி செய்ய மாணவர்களுக்கு கல்லூரிகளிலே பயிற்சி வழங்கி தயார்படுத்த வேண்டும்”.

கோவைக்கு முன்னுரிமை:

“கோவை விமான நிலைய விரிவாக்கம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பிலே உள்ளது. மாநில அரசு விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்திக் கொடுத்தால் மத்திய அரசு மேற்கொண்டு பணிகளைச் செய்யத் தயாராக இருக்கிறது. விரிவாக்கம் செய்யத் தடையாக உள்ள பிரச்சினைகளை சரி செய்து மாற்றுத்தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும்”.

கோவைக்கு மட்டுமல்லாது ஓசூர், தஞ்சாவூர், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் விமான சேவை கொண்டு வர உடனடியாக நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த வேண்டும். இப்பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பஞ்சமி நிலத்தை மீட்க குரல்:

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப் பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பல கமிஷன்கள் அமைத்தும் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும்,

பஞ்சமி நிலங்களின் உரிமை மாற்றம் ஆதிதிராவிட மக்களுக்கே சென்று சேர வேண்டும். கர்நாடகம், மகாராஷ்டிரம் போல இந்த நிலங்களை மீட்டெடுக்க தமிழகத்திலும் தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

கோவை தெற்கின் தேவைகள்:

“கோவை தெற்கு தொகுதியில் பாரம்பரியமான தங்க நகைத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கக் கூடிய பகுதி. கிட்டத்தட்ட 20 சதவீதம் மக்கள் இந்த தொழிலை விட்டுச் சென்று விட்டனர். இத்தொழிலாளர்களின் வசதிக்காக இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் அனைத்து வசதிகளும் பொருந்திய ஒரு தங்க நகைத் தொழில் பூங்கா ஏற்படுத்த வேண்டும். இதனை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்”.

கோவையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளங்களைச் சீரமைத்து உள்ளனர். ஆனால் சீரமைக்கப்பட்ட குளங்களை இணைப்பது தொடர்பான பணிகள் இன்னும் மேற்கொள்ளப் படவில்லை. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். எனவும் பேசியுள்ளார்.

உடனடி தீர்வுகள்:

தொழில் நுட்பம் வழியாக தன்னை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், கோவை தெற்கு தொகுதி தொடர்பான புகார்களை மக்கள் சிரமமின்றி அளிப்பதற்காகவும், வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை மக்கள் தெரிவிப்பதோடு ஓரிரு நாட்களுக்கு உள்ளாகவே அதற்கு தீர்வும் காணப்படுகிறது. இவ்வாறு சரி செய்யப்படும் பிரச்சினைகளை தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிடுகிறார் வானதி.

தொகுதிக்கு முன்னுரிமை:

“பாஜக தேசிய தலைவர் என்ற முக்கிய பொறுப்பு வகிக்கும் நிலையில் மகளிர் அணி வேலைகளுக்காக வட மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். அதிக வேலைப்பளு இருந்தாலும், என் தொகுதி மக்களுடன் எப்பொழுதும் நான் தொடர்பில் இருப்பேன். மக்களை சந்திப்பதற்கென நேரம் ஒதுக்கி சந்தித்து வருகிறேன்.

மற்ற மாநிலங்களுக்கு நான் செல்லும் போது அங்கு நடைபெறும் மக்கள் நலத்திட்டப் பணிகளை பற்றி அறிந்து நம் மாநிலத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பணிகளை முன்னெடுத்து வருகிறேன். நான் மேற்கொள்ளும் பயணங்களைக் கூட மக்கள் நலனுக்காக மாற்றி வருகிறேன்.

கோவை தெற்கு தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு மூச்சாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கிறேன். சில சமயங்களில் நேரடியாக நானே தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பார்வையிடுகிறேன்.

தமிழகத்தை 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றுவதற்கு என் சார்பாக நானும் முயற்சி எடுத்து வருகிறேன்”.

நீட் சமூக நீதிக்கு எதிரானது அல்ல:

கடந்த 2017ல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட போது அரசுப் பள்ளி மாணவர்களுக்காக கோவையில் நீட் பயிற்சி முகாம் நடத்தியுள்ளார் வானதி. நீட் தேர்விற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பாஜகவை சேர்ந்த நான்கு

எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர். “நீட் தேர்வு அறிமுகப்படுத்தியபோது தமிழக்தில் பாடத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்ததால் சமச்சீர் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் பாடத்திட்டத்தை மாற்றிய பிறகு கடந்த வருடம் நீட் தேர்வில் தேசிய சராசரி விகிதத்தை விட தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஆனால் நீட்டில் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இடஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறக் கூடிய மாணவர்கள் பாதிக்கப்படவில்லை”.

“நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் உள்ள அகில இந்திய அளவிலான இடம் மட்டுமல்லாமல் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு இந்த தேர்வு முறை பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் மத்திய மருத்துவக் கல்லூரிகளில் தனியாக தேர்வு எழுதாமல் இடம் பெற முடியும்.

ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த மருத்துவர் படிப்பு, நீட் மூலம் ஏழைகளுக்கும் எட்டும் கனியாக மாறியுள்ளது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவர் ஆகலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திறமையானவர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் வானதி பதிவிட்டுள்ளார்.

மன மாற்றம் வேண்டும்:

“மகளிர் அணித்தலைவியாக 21 மாநிலங்களுக்கும் மேல் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளேன். மகளிரை அரசியலில் ஈடுபடுத்துவதற்கான தீவிரமான பணிகளை கட்சி ரீதியாக செய்து வருகிறேன். மேலும், பெண்களை மையப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்”.

“பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் குற்றச் சாட்டுகள் எல்லா நாடுகளிலும் எல்லா காலகட்டத்திலும் அரங்கேறி வந்தாலும், இன்றைக்கு பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராகப் போராடுவதும், பெண்கள் பாதிக்கப்படும் போது சமுதாயத்தில் அவர்களுக்கு ஆதரவான குரல் பலமாக ஒலிப்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக் கிறோம். மேலும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் கடுமையான சட்ட முன்னெடுப்புகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் சட்டம் ஒரு கை என்றால், இன்னொருபுறம் சமுதாயம் ஒரு கையாக இருந்தால் தான் பெண்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும். சட்டங்கள் அரணாக இருந்தாலும் சமுதாயத்தில் ஏற்படும் மன மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்தே ஏற்பட வேண்டும்”. அந்த மன மாற்றமே பெண்களின் பாதுகாப்பிற்கு அரணாக அமையும்.