திருநங்கைகளுக்கு முதலுதவி சிகிச்சை இலவச பயிற்சி முகாம்

ஃபர்ஸ்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன்ஸ் நெட்வொர்க் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு உயிர் காக்க உதவும் அவசர கால முதலுதவி சிகிச்சை பற்றிய இலவச பயிற்சி முகாமை நடத்தியது.

ஃபர்ஸ்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன்ஸ் நெட்வொர்க் மற்றும் கோயம்புத்தூர் காட்டன் சிட்டியின் ரோட்டராக்ட் கிளப்புடன் இணைந்து திருநங்கைகளுக்கென அவசர கால நேரங்களில் உயிர் காப்பதற்கான முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாமை நடத்தினர்.

கோயம்புத்தூர் காட்டன் சிட்டியின் ரோட்டராக்ட் தலைவர் காருண்யா பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். இதில் ஃபர்ஸ்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் சரவணன் அவசர கால முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்தார். திருநங்கைகள் மட்டும் நிர்வகிகளாக உள்ள டிரான்ஸ்மாம் அறக்கட்டளையுடன் இணைந்து நடைபெற்ற இதில், உயிர் காக்கும் முதலுதவி, குட் சமாரிட்டன் சட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் சி.பி.ஆர்.எனப்படும் செயற்கை சுவாசம் குறித்த முக்கியத்துவங்களை விரிவாக செயல்முறை வழியில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இருதயப்பிடிப்பு, மாரடைப்பு, மூச்சுத் திணறல், நீரில் மூழ்குதல், மின்சாரம், பாம்பு கடித்தல் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற எதிர்பாரா தருணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலுதவிகள் ஆகியவை பயிற்சியாளர்கள் உதவியுடன் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.