மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

உலக முதியோர்‌ தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறையின்‌ சார்பில்‌ 80 வயது முடிவுற்ற மூத்த குடிமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சமீரன் பொன்னடை அணிவித்து கெளரவித்தார்.

உலக முதியோர்‌ தினம்‌ இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை ஆர்‌.எஸ்‌.புரத்தில்‌ உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று சமூக நலத்துறையின்‌ சார்பில்‌ உலக முதியோர்‌ தினவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் 80 வயது முடிவுற்ற மூத்த குடிமக்களுக்கு மாவட்ட ஆட்சிஅர் சமீரன்‌ பொன்னடை அணிவித்து கெளரவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட சமூக நல அலுவலர்‌ தங்கமணி, வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ ரவிசந்திரன்‌, இளங்கோ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கூறியதாவது:

ஒரு மனிதன்‌ பிறந்தது முதல்‌ குழந்தைப்‌ பருவம்‌, வளரிளம்பருவம்‌, வயதுவந்தோர்‌ பருவம்‌ போன்ற பருவங்களை கடந்து முதுமை எனும்‌ பருவத்தை அடைகிறான்‌. முதுமை என்பது அனுபவத்தின்‌ பொக்கிஷமாக திகழ்கிறது.

உலக முதியோர்‌ தினம்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ அக்டோபர்‌ முதல்‌ தேதியில்‌ உலகெங்கிலும்‌ கொண்டாடப்படுகிறது. எண்முறை பயன்பாடு அனைத்து வயதினருக்கும்‌ உரியது என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு உலக முதியோர்‌ தினம்‌ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்‌, அனைத்து வகைகளிலும்‌, சமூகத்திற்கும்‌ தேசநலனிற்கும்‌ சேவையாற்றிய இந்நாட்டின்‌ மூத்த குடிமக்களுக்கு எனது நெஞ்சம்‌ நிறைந்த முதியோர்‌ தின வாழ்த்துகளையும்‌ வணக்கத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

முதியோர்கள்‌ தங்களுக்கு ஏற்படும்‌ பிரச்சனைகள்‌ மற்றும்‌ குறைகளை தெரிவிக்க 14567 என்ற இலவச உதவி எண்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது எனத்தெரிவித்தார்.