எஸ்.என்.எம்.வி கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று, ‘மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்”, ‘எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை”, ‘பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்று விடலாம்” போன்ற காந்தியின் பொன்மொழிகளைக் கூறி, அவரின் கொள்கைகளான அகிம்சை, மதுவிலக்கு, தீண்டாமை, கதர் ஆதரவு, நாட்டுப்பற்று ஆகியவற்றை நம்மால் இயன்றவரை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என தலைமையுரை வழங்கினார்.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் காந்தியின் பாடல்களைப் பஜனை பாடினர். கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, ஓவியம், முகஅலங்காரம், காந்தி குறித்த காணொளி மற்றும் மாறுவேடம் என ஐந்து போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்பட்டன.

மேலும் மேலாண்மைத்துறைத் தலைவர் முத்துக்குமார் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.