முறையான வாழ்வே ஆரோக்கியத்தை வளப்படுத்தும்!

– டாக்டர் நந்தகுமார், இருதய நல மருத்துவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

& ஹார்ட் லேண்ட்ஸ் கிளினிக்

தெற்கு ஆசியாவில் உள்ள மக்களுக்கு (இந்தியா, பாகிஸ்தான். ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்) மற்ற நாட்டினரை விட இருதயம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் வருவதாகவும், இந்த பகுதியில் உள்ள இளம் தலைமுறையினர் மற்றும் மத்திய வயதுடையோருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நம் நாட்டில் குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமல்லாமல் அதிகப்படியான மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற காரணிகள் இருதய நோயை ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை அதிகப்படுத்தியுள்ளன.

மற்ற நாட்டவர்களின் உடல் அமைப்பை ஒப்பிடும்போது இந்தியர்களின் உடல் அமைப்பில் இருதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லக்கூடிய ரத்த குழாய்களின் அளவு சிறிதாக காணப்படுகிறது. சிறிய அளவிலான சுருங்கிய ரத்தக் குழாய்களில் விரைவில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அறிகுறிகள் தென்படாமலே இதய பாதிப்புகள் ஒருவருக்கு வந்து விடுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு கட்டுப்பாடு இல்லாமை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஒருவருக்கு அதிகரிப்பதோடு, அவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன.

இந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகள் உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. இவை சரிவிகிதமாக அனைத்து ஊட்டச் சத்துகளையும் கொண்டுள்ளது.  ஆனால் இவற்றைத் தவிர்த்து நமது உணவு பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினர் பாஸ்ட் புட் என்ற சொல்லக்கூடிய உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். இதனால் உடல் எடை கூடுதல், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதோடு ரத்த நாளங்கள் சம்மந்தமான (இருதய நோய், பக்கவாதம்) பாதிப்புகளும்  அதிகரித்து கொண்டே செல்லும்.

கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம்  போன்றவை கிராமங்களை நகர தரத்திற்கு உயர்த்தியுள்ளன. அதோடு மேற்கத்திய கலாச்சார முறைகளும் அதிகரித்துள்ளது. உணவு முறையில் மாற்றம், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் கிராமங்களிலும் இருதய பாதிப்பு கூடியுள்ளதை பார்க்க முடிகிறது. முன்பு நகரங்களில் உள்ளவர்களில் மட்டுமே இருதய பாதிப்புகள் காணப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களில் உள்ளவர்களிலும்  இப்பாதிப்பு அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

காலத்தின் தேவைக்கேற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளால் அனைத்தும் இயந்திரமாக்கல் முறையில் உருமாற்றம் பெற்றுவிட்டன. இதனால் மனிதனின் உடல் உழைப்பும் குறைந்து விட்டது. இதுவும் நோய்க்கு ஒரு காரணமே.

முன்பெல்லாம் பிறப்பில் இருந்தே இருதய பாதிப்பு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே வழியாக இருந்தது. ஆனால் மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வசதிகள் முன்னேற்றம் அடைந்து இருதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன வசதிகளும் வந்துவிட்டது. இதன் மூலம் பாதிப்புகளை சரிசெய்ய வாய்ப்பு இருந்தாலும் வரும்முன் காப்பதே சாலச் சிறந்தது.

டென்ஷனை குறைக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் உதவுகின்றன. அதுபோல வேலைப்பளுவினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம்  மற்றும் சோர்வை போக்க ‘பவர் நாப்’ என்று சொல்லக் கூடிய சிறிய தூக்கம் உதவும். காலை முதல் மாலை அல்லது இரவு வரை ஓய்வில்லாமல் வேலை செய்பவர்கள் தங்களது வேலைக்கு நடுவே சிறிய ஓய்வு எடுப்பது அவசியமான ஒன்று. அதுவும் 20 நிமிடங்கள் அளவிலான ஆழ்ந்த உறக்கம் அல்லாத சிறு தூக்கம்  நம் உடலுக்கு நாமே அளிக்கும் ரீசார்ஜ் போன்றது. இப்படி செய்யும் போது அடுத்த சில மணி நேரங்கள் நாம் செய்யும் வேலையில் அதிக சுறுசுறுப்பும், ஆற்றலும் வெளிப்படும்.

நீண்ட நேரம் ஓய்வில்லாமல் வேலையில் ஈடுபடும் போது உடல் மற்றும் மனம் சோர்வடைந்து மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் செய்யும் வேலையில் சிறந்த செயல்திறன் வெளிப்படாது. குறிப்பிட்ட கால அளவிலான ஓய்வு எடுத்து நம் பணியை தொடரும்போது திறத்துடன் செய்ய முடிவதோடு சீக்கிரமாகவும் வேலையை முடிக்க முடியும்.

அதேசமயம் இடைவெளி இல்லாமல் வேலையில் ஈடுபடும் ஒருவரின் உணவு பழக்கமும் தானாகவே மாறிவிடுகிறது. அவருக்கு வேலை முடிந்த பின் உண்ணலாம் என்ற எண்ணம் எழுவதோடு பசியில் உண்பதால் அதிக உணவையும் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதுவும் உடலை பாதிக்க கூடிய ஒன்றுதான்.

ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளாததால் உறக்கம், உணவுப் பழக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த சுழற்சியைத் தொடர்ந்து நாம் பழக்கப்படுத்தி வந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். அதனால் வேலை மற்றும் வாழ்க்கையில் நமக்காக ஒதுக்கும் நேரம் இரண்டையும் சமநிலைப்படுத்தி வாழ கற்றுக் கொள்ளவேண்டும். நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்காகவும் உழைக்கும் இந்த வாழ்க்கையில் இந்த சமநிலையை கையாளுவதில் பலரும் தடுமாறுகின்றனர். இதை எப்படி கையாளுவது என தெரிந்தும், புரிந்தும் கொண்டால் ஆரோக்கியம் சிறக்கும்.