கோவையில் 2400 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு : அமைச்சர் தொடக்கி வைத்தார்

கோவை மாவட்டம் முழுவதும் 2400 கரப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழாவை கோவை பீளமேட்டில் தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைதுறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் 2400 க்கும் மேற்பட்ட ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவில் நலத்திட்டங்கள், சீர்கள் செய்யப்பட்டது. பீளமேட்டில் நடைபெற்ற விழாவில், தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கர்ப்பிணி பெண்களுக்கு சீர் செய்து பொருட்களை வழங்கி தொடக்கி வைத்தார்.

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தாலி கயிறு, தட்டு, சத்து உணவு மிட்டாய்கள், நெல்லிக்காய், நிலக்கடலை, கடலை பர்ப்பி, வெல்லம் கலந்த தேங்காய் மிட்டாய், கல்கண்டு போன்ற இனிப்பு வகைகள், தக்காளி, புளி, தேங்காய் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்தே கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அளித்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்படும். அதில் 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றார்.