காலநிலை மாற்றம்: 21.6 கோடி மக்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்

காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் 21.6 கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்வை எதிர்கொள்வார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் அதிகரித்தல், வெப்ப அலைகளின் தாக்கம், திடீரென உருவாகும் புயல், அதீத மழைப்பொழிவு, வெள்ளம், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அரங்கேறி வருகின்றன.

சமீபத்தில் வெளிவந்த ஐபிசிசி அறிக்கையின்படி காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்களை இனி அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிகரித்துவரும் புவி வெப்பத்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் கிட்டதட்ட 21.6 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து சொந்த நாட்டிற்குள் இடம்பெயர்வார்கள் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் உணவு தானிய உற்பத்தி, மீன் பிடித்தொழில் உள்ளிட்டவை பெரும்பாதிப்புக்குள்ளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிக்கலால் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் எனவும் இதனைத் தடுக்க உடனடியாக கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் தெற்காசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் 4.9 கோடி மக்கள் இடம்பெயர்வை எதிர்கொள்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SOURCE: DINAMANI