செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்த நாசா!

சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்திலிருந்து செப் 6 மற்றும் 8ம் தேதிகளில் சாம்பிள்கள் எடுக்கப்பட்டதை அடுத்து அதுகுறித்த அதிகார்பூர்வத் தகவலை நாசா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘6 செப்டம்பர் அன்று எடுக்கப்பட்ட சாம்பிளுக்கு மொண்ட்டினைர் என்றும் 8 செப்டமபர் அன்று எடுக்கப்பட்ட சாம்பிளுக்கு மொண்டக்னாக் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் விண்கலமான ‘பெர்செவரன்ஸ்’ செவ்வாய்க்கு சென்று சாம்பிள்களை எடுத்து வந்துள்ளது., ஏற்கெனவே எடுத்துவந்த வேறு சில சாம்பிள்களுடன் இந்த கற்கள் ஒப்பிடப்பட்டு அவற்றின் காலநிலை அளவிடப்படும் என நாசா அறிவித்துள்ளது. இதுவரை கணிக்கப்பட்டுள்ளதன் படி செவ்வாயில் எரிமலைச் சீற்றங்களுக்கான தடயங்களும் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.

செவ்வாயிலிருந்து எடுக்கப்பட்டுள்ள கற்கள் உயிர்கள் வாழத் தகுந்த சூழல் செவ்வாய் கிரகத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளதாக ஆய்வுக்குழுவின் தலைவர் கென் ஃபார்லி தெரிவித்துள்ளார். செவ்வாயிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் ஒன்று எரிமலைச் சீற்றத்தின் எச்சமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லில் இருக்கும் கிரிஸ்டல்கள் அந்தக் கல் உருவான காலநிலையைக் கணிக்க உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி எடுக்கப்படும் ஒவ்வொரு கல்லின் காலநிலை கணிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் இதுவரை எப்படியிருந்தது என்கிற வரலாறு கணிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செவ்வாயில் இருக்கும் பள்ளத்தாக்குகளில் ஏற்கெனவே தண்ணீர் இருக்கும் தடயங்களை நாசாவின் இதே விண்கலம் முன்னர் வெளியிட்டிருந்தது. இதுதவிர அந்த கோளில் வேறு எங்கும் தண்ணீரின் தடயங்கள் இருக்கிறதா என்கிற ஆய்வை நாசா மேற்கொண்டு வருகிறது. தற்போது ஜெசெரோ என்னும் பள்ளத்தாக்கில் ஆய்வை மேற்கொண்டு வரும் நாசா ஐம்பது வருடங்களுக்கு முன்பு அங்கே தண்ணீர் இருந்திருக்கலாம் எனக் கணித்துள்ளனர். நாசா தலைமையகத்தைச் சேர்ந்த மிட்ச் ஸ்கூல்ட் கூறுகையில், ‘இந்த சாம்பிள்களுக்கு பூமியில் மதிப்பு அதிகம். இந்த சாம்பிள்களைக் கொண்டு இது உருவான சூழல் அதன் மூலம் செவ்வாயில் தண்ணீரின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கணிக்க முடியும்’ என்றுள்ளார்.