இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும் – அமைச்சர் ராமச்சந்திரன்

கோவை லாலி ரோட்டில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பின்னர், தொழில்நுட்ப கருவிகளை பார்வையிட்டனர். இதையடுத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், திமுக ஆட்சியில் உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனி பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது எனவும் உழவர் வாழ்வில் முன்னேற்றத்திற்கு திமுக அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த வேளாண் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது என தெரிவித்தார்.

மாநில முழுவதும் 1,160 வேளாண் உபகரணங்கள் விவசாயிகளுக்கு வாங்கி குறைந்த வாடகைக்கு அளிக்கின்றனர் என்றும் இதில், கோவை மாவட்டத்தில் 52 கருவிகள் வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கருவிகளுக்கு மானியம் உள்ளது என தெரிவித்தார்.

தமிழகத்தின் நிலப்பரப்பு ஒரு லட்டத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோ மீட்டர். வருடத்திற்கு ஒரு சதவீதம் வனமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பத்து ஆண்டுகள் திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வருடத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 60 எக்டர் மரம் நட வேண்டிய சூழல் உள்ளது.

பத்து ஆண்டுகள் காலம் திமுக ஆட்சி செய்தால் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும். யானை மனித மோதல் நடவடிக்கை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், புதிய முயற்சியாக அகழியின் அளவை அகலப்படுத்தி அங்கு கான்கிரீட் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்வேலி போன்றவை போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.