கற்பகம் உயர்கல்விக்கழக முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக் கழக கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழாவும், அறிமுக வகுப்புகளுக்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேது.சுடலை முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். பதிவாளர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். காஹ்னசன்ட் நிறுவன இயக்குநர் அகஸ்டின் கனகசபாபதி சிறப்புரையாற்றினார். ‘கல்லூரிக் காலம் என்பது, கனவுகள் காண மட்டுமன்று. பொறுப்புகளைச் சுமக்கிற அளவில் மாணவர்கள் தம்மைத் தாமே உருவாக்கிக் கொள்ள முனைய வேண்டிய காலம். இப்பருவத்தில் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கை வளமாகும். வாழ்க்கை பிறருக்கு வரலாறாகும்’ என்றார்.

அவ்வகையில் வாய்ப்புகளை உரியவகையில் பயன்படுத்தி உயர்வதற்கு அடித்தளமான தமது கல்லூரிக்கால அனுபவங்களையும், பணியிட அனுபவங்களையும் மாணவர்களுக்குச் எடுத்துரைத்தார். இன்று அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த வேலைவாய்ப்புகள் பெருகி இருப்பதை தமது உரையில் சுட்டிக்காட்டினார். அவ்வாய்ப்புகளை வெற்றி வாய்ப்புகளாக அமைத்துக் கொள்வதற்கு மாணவர்களிடம் குறையாத ஆர்வமும், தன்னம்பிக்கையும், தொடர் முயற்சியும், காலமேலாண்மை முதலான ஆளுமைத் திறன் மேம்பாடும் அமைய வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தினார்.

இவ்விழாவில் 2,500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் இணைய வழியில் கலந்து கொண்டனர்.