இது பா.ஜ.க ரகசியம்!

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானப் பின், மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே சொக்கம்பட்டியில் 4.6.1984 ல் பிறந்தவர் அண்ணாமலை. கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவரும், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை, மாநிலத் தலைவராக பதவி அமர்த்தப்பட்டதற்கு பின்னால் பாஜகவின் ரகசிய அரசியல் கணக்கு இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

1980ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாஜக வடஇந்தியாவில் வேர்பிடித்து வளர்ந்து இப்போது ஆலமர விருட்சமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களில் கூட பாஜக வளர்ந்து ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் வளர முடியாமல் சிக்கித்தவிக்கிறது பாஜக.

தமிழக தேர்தல் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், பாஜக தனித்துப் போட்டியிட்ட காலகட்டத்தில் அதிகபட்சமாக பேரவைத் தேர்தலில் 2.8 சதவீத வாக்கு வங்கியும், 2014 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமைக்கு 5.5 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. இதை தவிர்த்து பார்த்தால், 1998, 1999 என இரு மக்களவைத் தேர்தல்கள் மட்டுமே பாஜக இடம்பெற்ற அணி வெற்றிகூட்டணியாக இருந்தன.

அதற்குப் பிறகு 2001 பேரவைத் தேர்தலில் திமுக – பாஜக கூட்டணியும், 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் படுதோல்வி அடைந்தன. அதன் பிறகு தமிழகத்தில் பாஜக தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு தான் இருந்தது. தனித்து நின்றும் பாஜகவால் சாதிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவுடன் கூட்டணி வாய்ப்பு கிடைத்ததே தவிர மீண்டும் அந்த அணி படுதோல்வியே அடைந்தது. இருப்பினும் 2021 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருப்பது ஆறுதல் பரிசு தான்.

2019ல் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இருப்பினும், 2021 பேரவைத் தேர்தல் முடிவுகளை மக்களவைத் தொகுதியுடன் கணக்கிட்டுப் பார்த்தால் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், சேலம், தருமபுரி, சிதம்பரம், தென்காசி என 8 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக – பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்த 8 தொகுதிகளிலும் அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மை வாக்குகளை பெற்றதற்குப் பின்னால் பாஜகவின் வாக்குகளும் இருப்பதாகவே பாஜக தேசியத் தலைமை நம்புகிறது. கொங்கு மண்டலத்தில் இயல்பாகவே இருக்கும் மென்மையான இந்துத்துவா வாக்குகளும், தென்காசி தொகுதியில் பாஜக பின்னால் புதிதாக திரண்டு நிற்கும் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளும் தான் இதற்கு காரணம் என கணக்குப் போடுகிறது பாஜக தலைமை.

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இந்த 8 தொகுதிகளையாவது எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என இலக்குடன் செயல்திட்டங்களை வகுத்துள்ளது பாஜக தலைமை. ஏற்கெனவே 2019, 2021 தேர்தல்கள் என இருமுறை கூட்டணியாக இருந்து தோல்வி அடைந்ததால் மீண்டும் ஜெயலலிதா பாணியில் (2004 மக்களவைத் தேர்தலுக்குப்பின் நடந்தது போல) பாஜகவை உதறிவிட்டு பிற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகமும் பாஜக தலைமைக்கு உள்ளது.

எனவே, பாஜகவை உதறிவிட்டு அதிமுக தனித்து போக முடியாதபடி கொங்கு மண்டலத்தில் அரண் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த அரண் அமைக்கும் பாஜகவின் செயல்திட்டத்துக்கு கருவிகள் தான் அண்ணாமலை, முருகன். முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த சமூகமான கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவி அளித்துள்ளனர். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் இருக்கும் 30 சதவீத கொங்கு வேளாளர் சமூகத்திலும், மத்திய அமைச்சர் முருகன் மூலம் அருந்ததியர்கள் மற்றும் தெலுங்கு மொழி பேசும் பிற மக்கள் மத்தியிலும் பாஜகவின் செல்வாக்கை வளர்த்து விட்டால் பாஜகவை, அதிமுக உதற முடியாத சூழல் உருவாகிவிடும் என்பதால் அதற்கான அரசியல் நகர்வுகளை பாஜக செய்யத் தொடங்கியுள்ளது.

பாஜகவின் இந்த நுண்ணிய கணக்கு வெற்றியும் பெறலாம், தோல்வியும் அடையலாம். கடந்தமுறை ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலினால் முன்னிறுத்தப்பட்ட போதும் கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் – திமுக அணி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிப்பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலிலும் மோடியா? ராகுல் காந்தியா? என்ற போட்டி ஏற்படும்போது கொங்கு மண்டலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருந்தாலும், அண்ணாமலை, முருகன் ஆகிய இருவரையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும்போது பாஜகவின் செல்வாக்கு ஓரளவு கொங்கு மண்டலத்தில் தக்கவைக்க முடியும் என நம்புகிறது பாஜக தேசிய தலைமை. மேலும், அண்ணாமலையை பொறுத்தவரை இளைஞர், ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தவர் என்பதால் மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரிடம் நன்கு பிடிப்பு உள்ளது. பொதுமக்களிடமும் பாஜக மீதான எதிர்மறைப் பார்வை மாறி வருகிறது.

இப்படியே அதிமுகவுடன் கூட்டணியாக இணைந்து பயணித்தால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தனது கூட்டணி கட்சிகளை விழுங்கி பாஜக வளர்ந்தது போல, எதிர்காலத்தில் அதிமுகவை விழுங்கி, திமுகவுக்கு எதிர்சக்தியாக உருவெடுக்கலாம் என்ற ரகசிய செயல்திட்டத்தையும் பாஜக கையில் வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.

பாஜகவைப் பொறுத்தவரை வலுவான மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தொடர்ந்து சில தேர்தல்கள் வரை பயணிப்பது, பின்னர் சரியான நேரம் வரும்போது அக்கட்சிகளின் வாக்கு வங்கியை விழுங்கி அதே மாநிலத்தில் வலுவான கட்சியாக மாறுவது என்பதை ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் தேசிய, ஆன்மிக சிந்தனை கொண்டவர்களாகவும், திமுக எதிர்ப்பு மனநிலை, பாஜகவின் கொள்கைகளுக்கு நேர் எதிராக இல்லாதவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக, மாநில சுயாட்சியை முன்னிறுத்தும் அடையாளமாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை முன்னெடுக்கும்போது, அதற்கு மௌனமாக இல்லாமல் அதை எதிர்க்கிறது அதிமுக. அதேபோல தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் கொண்டுவந்தபோது பாமக எம்.எல்.ஏ.க்கள் பச்சை துண்டு அணிந்து ஆதரித்தனர். ஆனால், அதிமுகவோ ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதுபோல, தொடர்ந்து பாஜக கொள்கையோடு அதிமுக ஒத்துப்போகிறது என்பதே உண்மை.

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு 10 சதவீத இடங்களை தருவதற்கு பிரதமர் மோடியிடம், எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவே தில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல 10 சதவீத இடங்களை பாஜகவுக்கு, அதிமுக ஒதுக்கினால் பாஜகவும் ஓரளவு கட்டமைப்பு ரீதியாக வளர்ச்சியை அடையும். பாஜகவின் கட்டமைப்புகளை பலப்படுத்தும்போது அதிமுகவை விழுங்குவது மிகவும் சுலபம்.

பாஜகவின் எதிர்காலத் திட்டம் பலிக்குமா?, அதிமுக விழித்துக்கொண்டு தப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2024க்கு பிறகு அதிமுக?

இது குறித்து ரவீந்திரன் துரைசாமி கூறியது: எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் விஸ்வரூபமெடுக்க பாஜக முயற்சி செய்யும். அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஜெயலலிதா இருந்ததால் 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டார்.

ஆனால், இனிமேல் இரட்டைத் தலைமையால் அதிமுக வாக்காளர்கள் இந்துத்துவா, கருப்பர் கூட்ட எதிர்ப்பு, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, மத்திய அரசின் புதிய மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்ட மனநிலை கொண்டவர்களாகவே உள்ளனர். எனவே, அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்து வாய்ப்பு வரும்போது அதிமுக வாக்காளர்களை திமுகவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக திருப்ப முடியும் என்பது தான் பாஜகவின் கணக்கு.

கர்நாடகத்தில் ஜனதாதள், மகாராஷ்டிரத்தில் சிவசேனா, கோவாவில் கோமந்தவாரி, ஹரியானாவில் ஹரியானா விகாஷ் கட்சி, ஆந்திராவில் தெலுங்குதேசம் (லட்சுமி சிவபார்வதி) ஆகிய கட்சிகளின் வாக்குகளை விழுங்கி பாஜக வளர்ந்தது போல தமிழகத்திலும் அதிமுகவை விழுங்கி வளர வாய்ப்பு உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்ற பின் அதிமுகவை விழுங்கும் பாஜகவின் செயல் திட்டம் வேகம் எடுக்கும் என்றார் ரவீந்திரன் துரைசாமி.