யோகா செய்ய எந்த யோகா மேட் பயன்படுத்துவது?

யோகா செய்யும்போது சாக்ஸ் அணியலாமா அல்லது வெறும் காலில் செய்யவேண்டுமா? ரப்பர் யோகா மேட்  பயன்படுத்தவேண்டுமா அல்லது காட்டனா? ஹடயோகா செய்யும்போது பின்பற்றவேண்டிய பழக்கங்கள் குறித்தும், பூமியுடன் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தையும் சத்குரு விளக்கியுள்ளார்.

யோகப்பயிற்சி செய்யும்போது சாக்ஸ் அணியத் தேவையில்லை. நீங்கள் சரியாக ஹடயோகா செய்தால், இது உங்கள் உடலில் அதிகமான உஷ்ணத்தை உருவாக்குகிறது. உடலிலுள்ள செல்களிலேயே உஷ்ணம் உற்பத்தியாகிறது, அதனால் குளிர்ப் பிரதேசங்களாக இருந்தாலும் குளிரை நீங்கள் உணரமாட்டீர்கள்.

உடலில் குறிப்பிட்ட சில இடங்கள் உள்ளன, அவை ஒன்றையொன்று தொடும்போது சில விஷயங்கள் நடக்கின்றன. ஹடயோகா செய்யும்போது பல நிலைகளில் உங்கள் குதிகால்களும் கால் கட்டைவிரல்களும் ஒன்றையொன்று தொட்டிருக்கும். அதனால் அப்போது சர்க்யூட் போன்ற அமைப்பு ஏற்படுகிறது. நீங்கள் சாக்ஸ் அணிந்தால் அந்த அமைப்பு உருவாவதற்கு அது தடையாக இருக்கும்.

பூமியுடன் ஒன்றியிருத்தல்

எல்லாவற்றுக்கும் மேலாக, யோகா செய்யும்போது, எல்லாவற்றுடனும் ஒன்றியிருப்பதன் முதல்படி இந்த பூமியுடன் ஒன்றியிருப்பது. பூமியுடன் தொடர்பிலிருப்பது முக்கியமானது. அப்படி உங்களால் செய்யமுடியாத பட்சத்தில், ஹடயோகா சிறந்த பலன் தர, மண்ணையும் கழிமண்ணையும் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட இடத்தில், அதிகம் பதப்படுத்தப்படாத பட்டு வகையான ரா சில்க் (Raw silk) அல்லது சான்போர்ஸிங் (Sanforizing) செய்யப்படாத ரா காட்டன் (Raw cotton) வகையில் செய்யப்பட்ட யோகா மேட் பயன்படுத்தி யோகா செய்யலாம். (சான்போர்ஸிங் என்பது பருத்தியை முன்பே சுருக்குவதற்கு செய்யப்படும் செயல்முறை)

உடல் பூமியின் ஒரு துண்டு என்பது உடலுக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. நீங்கள் யோகா செய்யும்போது, இதை விழிப்புணர்வாக உணரவேண்டும் என்று விரும்புகிறீர்கள், நீங்கள் வாழும் இந்த பூமியின் ஒரு அங்கமாக உங்களை உணர விரும்புகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தின் 80 சதவிகிதம், பூமியுடன் எந்த அளவு நீங்கள் இசைந்து இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. உங்கள் தீராத வியாதிகளில் 80 சதவிகிதம், பூமியுடன் சற்று ஒத்திசைவுடன் இருப்பதாலேயே மறைந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.

நான் உங்களிடம் கேட்பதெல்லாம், “நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க இங்கு இருக்கிறீர்களா அல்லது வாழ்க்கையிலிருந்து தப்பித்துக்கொள்ளவா?” நீங்களே அறியாமல் உங்களை பலவிதங்களில் வாழ்க்கையிலிருந்து தொலைவுபடுத்தி பாதுகாத்துக் கொள்கிறீர்கள்.

உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்கலாம், உங்களுக்குள் இருக்கும் பேக்டீரியாக்களின் விகிதம் மற்ற அனைத்தையும் விட அதிகம். நுண்ணுயிர்கள் உங்களுக்குள் தங்குவது மட்டுமின்றி தொடர்ந்து உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கின்றன. உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால், அதுவே ஒரு நோய். உங்களை உலகின் மீதியிலிருந்து பாதுகாத்துக்கொண்டால், உங்களின் ஆற்றல் தொடர்ந்து குறைகிறது.

அதனால் நீங்கள் வீட்டிலேயே இருப்பவராக இருந்தால், தினமும் காலையில் ஒரே இடத்தில் விழிக்கிறீர்கள் என்றால், யோகா செய்ய காட்டன் அல்லது ரா சில்க் யோகா மேட் பயன்படுத்துவது சிறந்தது, இவை பூமியுடன் தொடர்பில் இருக்க உதவும். இயற்கை மூலப்பொருட்கள் பூமிக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்புக்கு தடைசெய்யாதிருக்கும்.