மூன்றாம் அலை, உஷார்!

செப்டம்பர் மாதம் மூன்றாம் அலை வரப்போகிறது தயாராகிக் கொள்ளுங்கள், என்று அவ்வப்போது மருத்துவ வல்லுநர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசும் கூட அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படலாம் என்ற எச்சரிக்கை செய்தியால் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ குழுக்கள், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் என எல்லாம் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. நமக்கு அண்டை மாநிலமான கேரளத்தில் இன்னும் தொற்று வேகம் குறைந்த பாடில்லை. இதற்கிடையில் சிலபேர் விநாயகர் ஊர்வலம் நடத்துவோம் என்கிறார்கள். இங்கே கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

இன்னும் தமிழக மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு முடிந்த பாடில்லை. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட்டுத்தான் கல்வி நிலையங்களுக்கு வரவேண்டும் என அரசு ஆணையே இட்டிருக்கிறது. என்றாலும் பள்ளி, கல்லூரிகள் திறந்த பிறகு பல மாணவர்களும், ஆசிரியர்களும் தடுப்பூசி போடாதது தெரியவந்துள்ளது. இப்போது சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி ஊசி போடுகிறார்கள். இதுதான் நடைமுறையில் நிலைமை.

இன்னொரு பக்கம் உலகின் பல நாடுகளில் இன்னும் கோவிட் 19 தொற்று குறையாமல் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த நாள் வரை இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கோவிட் 19 பெருந்தொற்றால் சுமார் ஐநூறு பேர் மரணமடைகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவில் மரணமடைவோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரத்தைத்தொடுகிறது. இதுதான் களநிலவரம். பக்கத்து மாநிலமான கேரளத்தில் முப்பதாயிரம் என்று எண்ணிக்கை வருகிறது. ஓரளவு தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ஓணம் பண்டிகைக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கச் செய்து விட்டன. தற்போது அந்த பயத்தில் தமிழக எல்லை பாதுகாப்பாக செயல்படுகிறது.

கேரள மாணவர்கள் தடுப்பூசி சான்றிதழ் உடன் வந்தால் தான் தமிழக கல்லூரிகளில் அனுமதி என்ற நிலை வந்துவிட்டது. இன்னொரு பக்கம் கோவை போன்ற கேரள எல்லையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அகற்றப்பட்டு மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டம் சேருவது பெருந்தொற்றுக்கு பெரிய வாய்ப்பாக அமைகிறது என்று தெரிகிறது.

இந்த நிலையில் தான் விநாயகர் ஊர்வலம் போன்ற பண்டிகைகளும் வருகின்றன. அதனை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று அனைவரும் சரியான முறையில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிலைமை முன்பு போல இல்லை. ஏற்கனவே இரண்டு கொரோனா அலைகளால் பாதிக்கப்பட்டு மாநிலமும் மக்களும் நொந்துபோய் இருக்கிறார்கள். கோவில் கதவின் முன் தெருவில் குறைந்த உறவினர்களுடன் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஏதோ ஓரளவு நிலை சீராகி இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆக்சிஜனுக்கு பட்ட பாட்டை நாம் என்றும் மறக்கக்கூடாது. வேன்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்துக் கொண்டு பில்லிங் ஸ்டேஷன்களுக்கே சென்று நேரடியாக சிலிண்டர் மாட்டி சுவாசித்ததை நினைவு கொள்ள வேண்டும். சென்னை, ராயப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ளே இடம் இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நின்றதை மறந்து விடக்கூடாது. ரயிலிலும், விமானத்திலும் ஆக்சிஜனும், அதன் செறிவூட்டிகளும் வந்த இறங்கியதை இன்னும் பலருக்கும் நினைவிருக்கும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடங்கி நம் உறவினர்கள் வரை எத்தனை அன்புக்குரியவர்களை இந்த கொரோனா பெருந்தொற்று வாரிச் சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது?

அந்த வகையில் இன்னும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒருபுறம் கொரோனா பெருந்தொற்று, இன்னொரு புறம் வாழ்வாதாரத்துக்கு போராட்டம் என்று மக்கள் தவித்துக்கொண்டு இருக்கும் நிலையில் புதிதாக தொற்று பரவச் செய்யும் எந்த செயலையும் யாரும் செய்து விடக்கூடாது, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவற்றையும் சேர்த்து.

இப்போது தான் பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பவர்கள் நம் நாட்டின் எதிர்காலம், நமது சொத்து. இவர்களைப் பாதுகாத்து கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப்போராடி நிலைமையை முதலில் சமாளிப்போம், பிறகு அடுத்தடுத்து எல்லாவற்றையும் சரி செய்வோம். இதில் தனிப்பட்ட கொள்கைகளுக்கோ, திட்டங்களுக்கோ இடமில்லை. அனைத்து மக்களும் நலமாக இருக்க வேண்டும், இந்த கொரோனா பெருந்தொற்று ஒழிய வேண்டும் என்பது தான் நம் அனைவரின் எண்ணமாக இப்போது இருக்க வேண்டும். அதை முதலில் தனிநபர், அமைப்புகள், அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், அரசாங்கம் என்ற எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம்.