“கோவைக்கான மாஸ்டர் பிளானை உடனடியாக அறிவிக்க வேண்டும்” – வானதி சீனிவாசன்

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மூலம் தற்போது வரை ரூ.2,000 கோடி முதலீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.

மேலும் தனது சட்டசபை உரையில் அவர் கூறியதாவது: தொழிற்படிப்பு படித்த இளைஞர்களுக்கான திறம் மேம்பாடு குறித்து, ஆண்டு ஒன்றிற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழக பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். நிறுவனங்களில் வேலை இருந்தும் உரிய பயிற்சி இல்லாத காரணத்தினால் பட்டதாரி இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் படிப்புக்கு தகுந்த வேலைகளை வழங்குவதற்கு தமிழக அரசு என்ன திட்டங்களை வைத்துள்ளது? என்ற கேள்வியை எழுப்பினார்.

கோவை மாவட்டத்துக்கான மாஸ்டர் பிளான் என்கின்ற நகர கட்டமைப்பு வசதிகளுக்காக ஏற்படுத்தக்கூடிய திட்டம் 1994 ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக மாஸ்டர் பிளான் எதுவும் அறிவிக்கப்படவில்லை. டவுன் மற்றும் கண்ட்ரி பிளானிங் சட்டம் என்று சொல்லக்கூடிய ரீஜினல் பிளானிங் ஆதாரிட்டி அந்த பிராந்தியத்துக்கே ஒருமித்த ஒரு மாஸ்டர் பிளான் உருவாக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைத்தார்.

நீலகிரி மாவட்டம் மாதிரியான பல்லுயிர் பெருக்கம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தொழில் மேம்பாட்டுக்காக, ஏற்றுமதிக்காக எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்கள் செய்யலாம், குடியிருப்பு வணிக வளாகங்கள் எந்த இடத்தில் எல்லாம் வருகிறது என்ற வகைப்பாட்டிற்கு இந்த மாஸ்டர் பிளானை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இதன் வாயிலாக பின்னலாடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்ற திருப்பூர், விவசாய பொருட்களில் மற்றும் தொழிற்நுட்ப வாகன உதிரி பாகங்களில் முன்னணியில் உள்ள ஈரோடு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பிராந்தியத்துக்கான மாஸ்டர் பிளான் ஆக வடிவமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.