எம்.எல்.ஏ.,க்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் உள்ள வாலாஜா சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் மறியலிலும் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொண்டாமுத்தூர், சூலூர், அண்ணாசிலை, காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குனியமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.,க்களை கைது செய்த திமுக அரசை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணா மலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர்.