“விநாயகர் சதுர்த்தி தடை கண்டனத்துக்குரியது”

விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற போக்கை கண்டித்து வருகின்றன 2 ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் செலுத்துவார்கள் என இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழக அரசு தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது கூட இந்து முன்னணி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து சிறப்பான முறையிலே மக்களுடன் கொண்டாடியது. அதன் காரணமாக எவ்வித தொற்றுப் பரவலும் உண்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ளது, மேலும் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டு உள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது நடுரோட்டில் பெரிய பெரிய இடங்களில் பந்தல் அமைத்து சமூக இடைவெளி கூட இல்லாமல் தொழுகை நடந்தது. அதேபோல கிறிஸ்தவர்களின் தூத்துக்குடி பனிமாதா சர்ச்சில் பத்து நாட்கள் மிக பிரம்மாண்டமான திருவிழா நடைபெற்றது. ஆனால் இந்துக்கள் ஆடிப்பெருக்கன்று நீர் நிலைகளில் வழிபாடு செய்ய, ஆடி அம்மாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அரசு தடை விதித்தது.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எப்படி நடத்த வேண்டும் என்று அனைத்து சமய அமைப்புகள், மற்றும் ஆன்மீக பெரியவர்களிடம் அரசு கருத்துகளை கேட்டது. சில கட்டுப்பாடுடன் விழா நடைபெற்றது.

இந்துக்கள் அனைவரும் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. மேலும் வீடுகளில் வழிபட்ட விநாயகரை கொண்டு வந்து கோவில் சுவர்கள் மீதும், கோவில் வளாகத்திலும் வைத்தால் அறநிலையத்துறை அதை அப்புறப்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

அப்புறப்படுத்த விநாயகர் குப்பைப் பொருளா? இது இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கை. பக்தர்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

எனவே விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றன 2 ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் செலுத்துவார்கள்.

அரசு உடனடியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொண்டு சமூக இடைவெளியுடன் மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநில செயலாளர் கிஷோர் குமார், கோவை கோட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.