கே.எம்.சி.ஹெச் சார்பில் இரண்டாவது நாளாக இலவச தடுப்பூசி

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பாக கோவை வரதராஜபுரத்தில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களுக்கான சி.எஸ்.ஆர் நிதியைக் கொண்டு தமிழகத்தில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வாகரையம்பாளைம் ஊராட்சி பகுதி பொது மக்களுக்கு 500 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இதில், மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில் கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரியின் கம்யூனிட்டி மெடிசின் பேராசிரியர் டாக்டர் ஜீவிதன், கே.எம்.சி.ஹெச் வணிக பிரிவின் துணை தலைவர் நாராயணன், மற்றும் கோவிட் நோடல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.