திமுகவின் ஆட்சி சிறப்பான ஆட்சி ! – லீமா ரோஸ் மார்ட்டின்

தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நூறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வெகு சிறப்பான ஆட்சியை நடத்துவதாக இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுசெயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் நூறு நாட்கள் திமுகவின் ஆட்சி சாதனைகள் குறித்து, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுசெயலாளர் லீமாரோஸ் மார்ட்டின் 100 நாள் ஆட்சி குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திமுக தலைமையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் மிக சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாகவும் குறிப்பாக ஆட்சிக்கு வரும்போது கொரோனா இரண்டாவது அலை பரவல் நேரத்தில், தீவிர நடவடிக்கைகளை எடுத்து 100 நாட்களில் கொரோனா பரவலை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

குறிப்பாக கோவை வந்த முதல்வர், மருத்துவர்களே கொரோனா வார்டுக்கு செல்ல அச்சப்படும் நிலையில் துணிச்சலாக உள்ளே சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசிடமிருந்து பெற்று தமிழகத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முதல்வரின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடியே முதல்வர் ஸ்டாலினை பாராட்டி உள்ளதாக தெரிவித்தார்.

மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கூட்டுறவு நகை கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிபடியாக நிறைவேற்றி வருகிறார். ஆடி மாதம் திருவாதிரை அன்று பிறந்த ராஜேந்தி்ர சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ள முதல்வருக்கு தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார்.