சேர மன்னரும் புலவர் கபிலரும்! 

பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழி சார்ந்து இயங்கக் கூடியவர்கள், மொழிப்பற்று கொஞ்சம் அதிகம் என்று பலருக்கும் மனதில் தோன்றக் கூடிய அளவுக்கு இங்கு தமிழ் மொழி  சார்ந்து பல நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன. நடந்தும் வருகின்றன. சங்க காலத்தில் கூட மன்னர்களிடத்தில் நெருக்கமாக இருந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்ப் புலவர்கள் தான் அவ்வளவு உரிமையுடன் இருந்திருக்கிறார்கள்.  பல நூற்றாண்டுகளாக இருந்த அந்த பண்பு திராவிட முன்னேற்றக் கழக போராட்டங்களிலும் ஆட்சியிலும் முதலிடம் பெற்றது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழில் எழுத்தாளர்களாகவும், தலைசிறந்த பேச்சாளர்களாகவும் திகழ்ந்தனர். உலகத் தமிழ் மாநாடு தொடங்கி, செம்மொழி மாநாடு வரை நடத்தப்பட்டன. பல தமிழறிஞர்கள் விருதுகளும், உதவிகளும் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டனர். இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. என்றாலும் தொடர்ந்து இங்கு இருந்து வரும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் இலக்கியவாதிகள் கண்டு கொள்ளப்படவில்லை, புறக்கணிக்கப்படுகிறார்கள். அங்கே வங்காளத்தைப் பாருங்கள், இங்கே கேரளாவைப் பாருங்கள், கர்நாடகாவைப் பாருங்கள் என்றெல்லாம் அது எதிரொலித்தது வந்தது.

அதுவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தலைமுறை மனிதர், இலக்கியத்துக்கே தொடர்பில்லாதவர், இனி தமிழ், தமிழறிஞர்கள், புத்தகங்கள், சமூகத்துக்கு உழைப்பவர்கள் இவர்களுக்கு பழைய தலைமுறை தலைவர்களைப் போல ஆதரவு அளிப்பவர் யாரும் இல்லை என்று ஒரு கருத்தும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைள், பற்றாக்குறை கருவூலம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளோடு இவற்றையும் நினைவில் வைத்து தொடர்ந்து நடத்திக் காட்டி வருகிறார்.

முதலில் மாபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்த போது அவரின் இலக்கியப் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக அரசு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதைப் போலவே சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் இளங்குமரனார் மறைந்த போதும் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க உத்தரவிட்டதோடு விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றும் வரும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதே வேகத்தில் விருதாளரை தேர்வு செய்ய தமிழக முதல்வர், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா அவர்களுக்கு தமிழக அரசின் “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுவும் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த விருதை சங்கரய்யாவின் இல்லத்துக்கே சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கப் போவதாகவும் அறிவிப்பு வந்துள்ளது.

அதைவிட சிறப்பு என்னவென்றால் தகுதியான ஒரு விருதான தகைசால் தமிழர் விருதைப்பெறும் தகுதி கொண்ட என்.சங்கரய்யா அவர்கள் அந்த விருதைப் பெற்றுக்  கொள்வதாகவும், ஆனால் அத்துடன் வழங்கப்பட உள்ள பத்து லட்சம் ரூபாய் நிதியை தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கூறி தனது தகுதியை இன்னும் உயர்த்திக் கொண்டு இருக்கிறார். இதைவிட தமிழகம் பெருமைப்படக் கூடிய நிகழ்வு இருக்க முடியாது.

தமிழக அரசாங்கம் தமிழ், இலக்கியத்துக்கு என்ன செய்தது, செய்ய இருக்கிறது  என்பதை செயலால் காட்டி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தகைசால் தமிழர் என்றால் யார், என்று நடந்து காட்டி இருக்கிறார் நூற்றாண்டு கண்ட தோழர் என் சங்கரய்யா அவர்கள். இனி அங்கே பார், இங்கே பார் என்று மேலேயும், கீழேயும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கேயே வாழும் எடுத்துக்காட்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதைப் பார்க்கும்போது சங்க காலத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. கிடைத்துள்ள சங்க கால இலக்கியங்களில் அதிக பாடல்களை  எழுதியவராக அறியப்படுபவர் புலவர் கபிலர். பாரி, காரி, செல்வக்கடுங்கோ வாழியாதன் உள்ளிட்ட பல மன்னர்களிடம் பாங்குடன் பழகி, பண்புடன் நடந்தவர். அவர் பதிற்றுப்பத்தில் வரும் ஏழாம் பத்து பாடல்களை எழுதிய போது அந்தப் பாடல்களைக் கண்டு மகிழ்ந்த சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலரை அழைத்து நூறாயிரம் பொன் நிதி கொடுத்து கூடவே நன்றா எனும் குன்றேறி நின்று அந்த மலையைச் சுற்றி கண்ணில் கண்ட இடங்களை எல்லாம் கபிலருக்கே அளித்து பெருமைப்படுத்தினான்.

அந்தப் பரிசை ஏற்றுக்கொண்ட புலவர் கபிலர், சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதாவது அவருக்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதிகளை எல்லாம் அந்த மன்னனே ஆண்டு வரும்படி அன்புக்கட்டளை இட்டார் என்று ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. அது தான் இந்த தகைசால் தமிழர் விருதிலும் எதிரொலிக்கிறது. தகுதியான ஒருவருக்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை அறிவித்ததும், அதை ஏற்றுக்கொண்ட சங்கரய்யா அதில் அளிக்கப்படும் நிதியை கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்கு அளித்ததும் மீண்டும் ஒரு சங்க காலத்தை நினைவூட்டுவதாகவே உள்ளது.

தகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழக அரசையும், தகைசால் தமிழரையும்

‘தி கோவை மெயில்’ பாராட்டி, வாழ்த்துகிறது.