அன்று கை கோர்த்தார்; இன்று கை விரித்தாரா?

எம்ஜிஆர் உயிரோடிருந்த போது தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்தது அதிமுக. அதேபோல, தொடர்ந்து இரண்டு முறை 2011, 2016 பேரவைத் தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியது.

ஜெயலலிதா உயிரோடிருந்தவரை கட்சி, ஆட்சி இரண்டு அதிகாரமும் போயஸ் தோட்டத்தில் தான் குவிந்து கிடந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2016 ல் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முதலிடத்தில் இருந்தாலும், கட்சியில் ஓபிஎஸ் – இபிஎஸ் என்ற இரட்டைத் தலைமையே நீடித்து வருகிறது. ஆட்சியில் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் நீடித்தாலும், அதிகாரம் அமைச்சர்களுக்கு பரவலாக்கப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வழக்கத்தைவிட கூடுதலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் ஆளுநர் வசம் திமுக அளித்தது. கடந்த பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போதும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்கள் குறித்து விசாரித்து, தண்டனை பெற்றுத்தருவோம் என திமுக தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம் பெற்றது.

திமுக ஆட்சியைப்  பிடித்த நிலையில் கொரோனா 2 வது அலை உச்சகட்டத்தில் இருந்ததால் கடந்த இரு மாதங்களாக ஊழல் வழக்குகள் தூசு தட்டப்படவில்லை. இருப்பினும் இதை விசாரிக்க நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமியை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஜிபியாக ஸ்டாலின் நியமித்தார். கொரோனா தாக்கம் முடியத் தொடங்கியதால் அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

முதல் வழக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முன்னாள் போக்குவரத்து அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

கைது நடவடிக்கையால் அனுதாப அலை ஏற்படக்கூடும் என்பதால் வழக்குப்போட்டு விரைவில் தண்டனை பெற்றுத்தந்தால் தான் மக்கள் மத்தியில் அதிமுகவை வீழ்த்தி திமுகவை பலப்படுத்த முடியும் என்பது கூட ஸ்டாலின் கணக்காக இருக்கலாம்.

இதன் விளைவாகவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்களையும், ரொக்கத்தையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்யவில்லை.  ஏனெனில் 1997 கைதுக்கு பிறகு 1998 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அது அனுதாப அலையாக மாறியது.  அதேபோல 2001 பேரவைத் தேர்தலுக்குப்பின்  நள்ளிரவில் கருணாநிதியை  கைது செய்தது,  அவருக்கு 2004மக்களவைத் தேர்தலில் அனுதாப அலையாக மாறியது.  இதை தவிர்க்கவே கைது நடவடிக்கையாக வேண்டாம் என ஸ்டாலின் கருதலாம்.

அதேநேரத்தில் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் அதிமுகவினர் தண்டனை பெற வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை திமுக அரசு தூசு தட்டத் தொடங்கியுள்ளதால் அதில் இருந்து தப்பிக்கவும்,  வழக்குகளின் வீரியத்தைக் குறைக்கவும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் – இபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதே உண்மை. இதன் விளைவாக அதிமுகவில் தனது ஆதரவு வளையத்தை அதிகரிக்கும் வேலையை ஓபிஎஸ் செய்து வருகிறார்.  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சுற்றுலாத்துறை அமைச்சரும்,  தமிழக மேலிட பார்வையாளருமான கிஷண் ரெட்டி ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளனர்.

அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில், திமுக நிர்வாகிகள்  மீது மத்தியில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தூசு தட்ட வேண்டும். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெயப்ரதீப்க்கு வருமான வரித்துறை அளித்த நோட்டீஸ் குறித்தும் பிரதமரிடம் கோரிக்கை  வைத்ததாக கூறப்படுகிறது.  இப்படிப் பட்ட சூழலில் இச்சந்திப்பு தங்களது வழக்குகளின் வீரியத்தை குறைக்க முடியும் என ஓபிஎஸ் – இபிஎஸ் நம்புகின்றனர். மேலும், அதிகாரிகள் மட்டத்தில் கூட இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.

ஆனால், மோடி மற்றும் அமித்ஷா இருவரும் எவ்வித உத்தரவாதத்தையும் அதிமுகவுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. மாறாக மோடி – அமித்ஷா இதை வைத்து அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என தெளிவுப்படுத்தியுள்ளார். இது சசிகலாவை மறைமுகமாக தாக்கும் கருத்தாக தான் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 19ம் தேதி பிரதமரைச் சந்தித்தப் பிறகு 100 சதவீதம் சசிகலாவுக்கு வாய்ப்பு இல்லை என்றார் இபிஎஸ். இப்போது பிரதமரை சந்தித்தபின்னர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் – ம் பேட்டி அளித்துள்ளார்.  இதன் மூலம் சசிகலாவுக்கு ஆதரவாக எந்த ஒரு விஷயத்தையும் பிரதமர் மோடி செய்யவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும், 2021 தேர்தல் முடிவுகளை,  மக்களவைத் தொகுதியாக பிரித்துப்  பார்த்தால் 8 மக்களவைத் தொகுதியில் அதிமுக முன்னணியில் உள்ளது.  கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி, சிதம்பரம், தென்காசி, ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக – பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவருக்கும் நேரம் ஒதுக்கியுள்ளார் மோடி.  அதேபோல டெல்லியில் பிரதமரைச் சந்தித்த பிறகே தமிழகம் முழுவதும் திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தை அதிமுக அறிவித்தது. இதன் மூலம் அதிமுகவை சொந்தம் கொண்டாடும் உரிமை தங்கள் இருவருக்கு மட்டுமே உள்ளது என்பதை முன்னெடுக்கும் அசைவுகளை ஓபிஎஸ் – இபிஎஸ் செய்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கே.பி.முனுசாமி,  சி.வி.சண்முகம், பாஜக கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மை வாக்குகள் வரவில்லை. இதனால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என கருத்து கூறினர்.  அன்று மாலையே  ஓ.பன்னீர்செல்வம்,  பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என தனது சுட்டுரையில் செய்தி வெளியிட்டிருந்தார். அடுத்த 4 மணி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கையை வெளியிட்டனர்.

இபிஎஸ். கருத்தை சி.வி.சண்முகம் கூறினாலும்,  அதை வெளிப்படையாக இபிஎஸ் ஒத்துக்கொள்ளும் நிலையில் இல்லை. இதன் விளைவு அதிமுகவில் தனது பிடியை இறுக்கிக்கொண்டார் ஓபிஎஸ்.  இதனால் தான் பிரதமர் மோடி சந்திப்பில் ஓபிஎஸ்-க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஓபிஎஸ் – க்கு வாக்கு வங்கி ரீதியிலும் பாஜக லாபமான கூட்டணியாகவே இருக்கிறது. தேனி மாவட்டத்தில் கணிசமாக வாழும் தேவேந்திர குல வேளாளர்கள், இந்து நாடார்கள் பிரதமர் மோடி மீது பற்றுதல் கொண்டு இருப்பதால் அது தனது மகனின் வெற்றிக்கு தொடர்ந்து கைகொடுக்கும் என ஓபிஎஸ் கணக்கு போடுகிறார்.

ஆனால், வட தமிழகத்தில் பாஜகவுக்கு சொல்லிக் கொள்ளும்  அளவுக்கு வாக்கு வங்கி,  கட்டமைப்பு இல்லாததால்,  பாஜகவை சி.வி.சண்முகம் தாக்குகிறார்.  இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையால் வடதமிழகத்தில் இருந்தும் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவில் குரல் எழும்பத் தொடங்கியுள்ளது.  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பாஜகவை பாராட்டிப் பேசத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறாக எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் 33 சதவீத வாக்கு பலம் கொண்ட அதிமுகவை கூட்டணிக் கட்சியாக வைத்திருக்க பாஜக விரும்புகிறது. அது 2024ல் கைகொடுக்கும் என பாஜக கருதுகிறது.  மத்தியில்  அதிகார பலம் இருப்பதால் பாஜக தங்களுக்கு தேவை என அதிமுக கருதுகிறது. வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவை  ஆயுதமாக பயன்படுத்தலாம் என அதிமுக தலைமை கருதலாம். இதன் காரணமாகவே பிரதமர் மோடியை, ஓபிஎஸ் – இபிஎஸ் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

இச்சந்திப்பால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு  அதிமுக அணியில் 10 சதவீத இடங்கள் கிடைக்கலாம். அது பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தக்கூடும். ஆனால், அதிமுகவின் ஊழல் வழக்குகளை மத்திய பாஜக அரசு ஒருபோதும் தடுக்கப் போவதில்லை. அதிமுக வீழ்ச்சியில் தானே பாஜகவின் வளர்ச்சி இருக்கிறது என்பது அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியக்கூடும்.