நேரு கல்வி குழுமங்களின் சார்பில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

நேரு கல்வி குழுமங்களின் சார்பில், ஆண்டுதோறும் நடக்கும் பணி நியமன ஆணை வழங்கும் விழா “ரித்தி – 2021” மெய்நிகர் காணொளி வாயிலாக (31.07.2021) நடந்தது.

நேரு கல்வி குழுமங்களில் உள்ள கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு, மெயர்நிகர் காணொளி வழியாக நடந்தது. 160-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் கலந்து கொண்ட நிறுவனங்கள் 1800 மாணவர்களை தேர்வு செய்து பணி நியமன உத்தரவுகளை வழங்கின.

இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. மெய்நிகர் காணொளி வழியாக நடந்த இந்த நேர்முக தேர்வில், மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதில் தேர்வான மாணவர்களுக்கு மெய்நிகர் வழியில் பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.கிருஷ்ணதாஸ், ரித்தி 2021 விழாவிற்கு தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில்,” மாணவர்கள், தங்களுக்கு ஏற்கனவே உள்ள திறமைகளை வளர்த்துக் கொள்வேதாடு, புதிய திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்நாளில் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள கற்றுக் கொண்டே இருப்பது அவசியம். உலகம், தற்போதுள்ள கடினமான நிலையிலிருந்து மீண்டு வருகிறது,” என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கருடா ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் எச்.எஸ் சஸ்வத்ஜெயின் பேசுகையில், “கடினமான உழைப்பே வெற்றிக்கு வழி. நம்பிக்கையோடும், ஈடுபாட்டுடனும் உண்மையாக உழைத்தால், யாராலும் அவரது வெற்றியை தடுக்க முடியாது. வாழ்க்கையில் எல்லோரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். அது, உடல்நலம் பேண மட்டுமின்றி, சுயஒழுக்கம், பொறுப்புணர்வு, நம்பிக்கை மற்றும் குழு பணி ஆகியவற்றை மேற்கொள்ள உதவும்,” என்றார்.

நேரு குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணக்குமார் வாழ்த்தி பேசுகையில், “படிப்பு முடித்து, பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். புதிய பயணத்தில் வெற்றி பெற, வேகமாக மாறி வரும் உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மையும் மாற்றிக் கொண்டு முன்னேற வேண்டும்,” என்றார்.

நேரு கல்வி குழுமங்கள் கல்லூரி முதல்வர்கள், பணியிடம் பெற்ற மாணவர்களை வாழ்த்திப்பேசினர்.