வுஹானுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் பரவும் தொற்று!

சீனாவில் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது ஐந்து மாகாணங்களுக்கும் தலைநகர் பெய்ஜிங் நகருக்கும் பரவ தொடங்கியுள்ளது. வுஹானுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் தொற்று பரவுகிறது என அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முதன்முதலில் நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் தேதியன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து இதுவரை 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்ஜிங் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நகர் முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

அந்நகரில் வசிக்கும் சுமார் 90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அரசால் நிர்வகிக்கப்படும் என ஷின்ஷுவா செய்தித் தளம் தெரிவிக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது போன்றும், அதிகாரிகள் மக்களை முகக்கவசம் அணிய வலுயுறுத்துவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் தூர இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்தப்படுவதாகவும், வரிசையில் பேசாமல் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொற்றுக்கு காரணம், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா திரிபுதான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் விமான நிலையம் எப்போதும் ஆட்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தொற்று பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தகவல் செய்தி