தகவல் தொழில்நுட்பம்: வரமா? சாபமா?

சாதாரண தொழில்நுட்பம் தொடங்கி, அணுசக்தி வரை எந்த தொழில்நுட்பம் என்றாலும் அதில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சிறிது தீமையும் கலந்திருக்கத்தான் செய்கிறது. அதுவும் அரசியல் சார்ந்த விஷயங்களில் இது இன்னமும் உச்சத்துக்குச் செல்லும். அது தான் இப்போதும் நடந்திருக்கிறது. இந்த முறை சர்வதேச அளவில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசாங்கம் எதிர்க்கட்சியை உளவு பார்ப்பதாக கூறப்படுவது காலம், காலமாக நடந்து வரும் ஒன்று. தொலைபேசியை ஒட்டுக் கேட்பது பழைய டெக்னிக். அது நவீன மென்பொருள் வடிவத்தில் தற்போது விசுவரூபம் எடுத்திருக்கிறது.

இந்திய அரசாங்கமானது, எதிர்க்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரை உளவு பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்குக் காரணம் இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாஸஸ் உளவு மென்பொருளை வடிவமைத்து உருவாக்கியது. இதன் மூலம் மற்றவர்களின் செல்போனில் நுழைந்து அதில் உள்ள விவரங்களை உளவு பார்க்க முடியும். இதைப் பயன்படுத்தி தான் இந்தமுறை உளவு பார்க்கப்பட்டிருப்பதாக பலமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு கூறப்படும் அடிப்படைக் காரணம் என்னவென்றால் இந்த “பெகாஸஸ்” மென்பொருளை வடிவமைத்த நிறுவனம், அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அதனை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அரசின் சில முக்கிய துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த மென்பொருளைத் தருவித்து பயன்படுத்தி இருக்கலாம் என்ற கருத்து எழுந்து, எதிர்க் கட்சிகள் அமளி, துமளி செய்து வருகின்றன.

ஆனால் மத்திய அரசு செல்போன்களை ஊடுருவி கண்காணிப்பது என்பதனை செய்யவில்லை என்று மறுத்துள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற செயல் நடந்ததா? நடந்தது என்றால் அதன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியம் ஆகும். ஏனெனில் இது தனிநபர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடங்கி நாட்டின் பாதுகாப்பு வரை தொடர்புள்ள ஒரு விஷயமாகும்.

அதற்கேற்ப இதுபற்றி தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது இந்திய அளவில் நடைபெறும் ஒன்று. ஆனால் இது இந்த எல்லையோடு நில்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வரை பரவி இருப்பதாக உள்ள குற்றச்சாட்டு, இந்த மென்பொருள் பயன்பாடு தகவல் தொழில்நுட்ப, பயன்பாட்டில் உள்ள குறை ஆகியவை குறித்து பல ஐயங்களை எழுப்புகின்றன.

உலகமே தகவல் தொழில்நுட்ப வலைக்குள் சிக்கி, டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில், குழந்தை பிறக்கும் போதே செல்போனுடன் பிறக்கும் காலகட்டத்தில் அதன் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் மிக அவசியம். இல்லை யார் செல்போனிலும் நுழைந்து உளவு பார்க்கலாம், சிக்கலை உண்டு பண்ணாலம் என்ற நிலை வந்தால், குழப்பமும், சிக்கலும் தான் மிஞ்சும்.

எனவே பொருளாதாரத்திலும், தகவல் தொழில்நுட்பத்திலும் வளர்ந்து வரும் இந்திய நாடு, இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எங்கு டிஜிட்டல் மயம், எங்கு எவ்விதமான தொழில்நுட்பம் என்று முடிவு செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் அடுத்தவரின் உரிமையில் தலையிடுவதாக இது மாறுகிறது. அந்த வகையில் அந்த அதிகாரம் படைத்தவர் யாரும் கிடையாது.

தனிநபர் உரிமை, பாதுகாப்பு ஒருபுறம், தேசநலன் மறுபுறம் என்று இரண்டையும் யோசித்து தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டிய தேவையைத் தான் இது காட்டுகிறது. இந்த மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் எல்லாம் வரமா, சாபமா என்று யோசித்து செயல்பட வேண்டிய தருணம் இது.