அருள்பெற வழிசெய்யும் விழிப்புணர்வு!

மனம் எப்பொழுதுமே சேகரிக்கும் தன்மை கொண்டது. தொடக்கத்தில் பொருட்களைச் சேகரிப்பதும், சிறிது வளர்ந்திருக்கும் பொழுது, அறிவைச் சேகரிப்பதும் அதன் தேவைகள். உணர்ச்சிகள் ஆதிக்கம் பெற்றிருக்கும்போது மனிதர்களைச் சேகரிப்பதற்கான தேவை அதற்கு இருக்கிறது. ஆனால் அடிப்படைத் தன்மையென்னவோ சேகரிப்பதுதான்.

மனம் என்பது எப்போதும் எதையாவது சேகரித்துக் கொண்டே இருப்பதுதான். ஒரு மனிதர், தான் ஆன்மீகப் பாதையில் இருப்பதாக நினைக்கவோ, நம்பவோ தொடங்கும் பொழுது “ஆன்மீக ஞானம்” என்று அழைக்கப்படுகின்றவற்றைச் சேகரிக்கத் தொடங்குகிறார். அவர் சேகரிக்கத் தொடங்குவது குருவின் வார்த்தையாகக் கூட இருக்கலாம். அவர் சேகரிக்கும் தேவையைத் தாண்டிச் செல்லாதவரை அவருக்கு வளர்ச்சியில்லை. அது உணவோ, பொருளோ, மனிதர்களோ அல்லது அறிவோ, எதை நீங்கள் சேகரிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல.

சேகரிப்பதற்கான தேவையே பற்றாக்குறை இருப்பதால்தான். எல்லையற்ற தன்மைக்குள் இந்தப் பற்றாக்குறை உணர்வு வந்ததால்தான் எல்லையுள்ள பொருட்களோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்தி விட்டீர்கள். ஆனால் அது நீங்கள் அல்ல. ஒருவர் தேவையான அளவு விழிப்புணர்வையும், அனைத்திற்கும் மேலாக ஒரு நிலையான ஆன்மீகப் பயிற்சியையும் அவருடைய வாழ்வில் கொண்டு வருவாரேயானால், மெதுவாக இந்தப் பாத்திரம் முழுவதும் வெறுமையாகிவிடும்.

விழிப்புணர்வு, பாத்திரத்தை வெறுமையாக்குகிறது. ஆன்மீகப்பயிற்சி, பாத்திரத்தைத் தூய்மையாக்குகிறது. எப்போது இந்த இரண்டு நிலைகளும் உறுதியாக இருக்கின்றதோ, விழிப்புணர்வும், ஆன்மீகப்பயிற்சியும் தேவையான காலத்திற்கு நிலையாக இருக்கின்றதோ, பிறகு உங்களது பாத்திரம் வெறுமையாகிறது. இந்த வெறுமை நிலை நிகழும்போதுதான் உங்கள் மீது அருள் பொழிகிறது.

அருள் என்பது இல்லாமல் யாரும் உண்மையில் எங்குமே செல்ல முடியாது. நீங்கள் அருளை உணர வேண்டுமென்றால், உங்கள் பாத்திரம் முழுவதும் வெறுமையாக வேண்டும். நீங்கள் ஒரு குருவுடன் வாழ்வது அவருடைய வார்த்தைகளைச் சேகரிப்பதற்காக மட்டுமேயென்றால், குளிர்காலம் அல்லது மழைக்காலத்திற்காக உணவைச் சேகரிக்கும் எறும்பின் வாழ்க்கையைவிட உங்கள் வாழ்க்கை வீணாகிவிடும்.

நீங்கள், அருளைப் பெறுவதற்கான நிலையில், உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லையென்றால், நீங்கள் அருளைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உங்களை வெறுமையாக்கிக் கொள்ளவில்லையென்றால், பிறகு இந்த ஆன்மீகப் பாதையில் தொடர்ச்சியாக பல பிறவிகள் நடக்க வேண்டிவரும். அருள் நிகழ்வதற்குப் போதுமான அளவு நீங்கள் வெறுமையடைந்திருந்தால், இறுதிநிலை என்பது வெகுதூரத்தில் இல்லை. இது இங்கேயே உணரப்பட வேண்டியது. இது இங்கேயே அறியப்பட வேண்டியது. இது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் கடந்து விவரிக்க முடியாத நிலைக்குள் செல்வது. இது நாளையோ மற்றொரு பிறவியிலோ நிகழவேண்டியது அல்ல. இது வாழ்வின் உண்மை நிலை.